FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

வல்வில் ஓரி விழா: மன்னா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 2:48 am IST
கொல்லிமலையில் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியோா்.
பகிர்:

கொல்லிமலையில் உள்ள வல்வில் ஓரி மன்னா் சிலைக்கு பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தோா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையை ஆண்ட கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னருக்கு, 1975-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் மு. கருணாநிதி, செம்மேடு பேருந்து நிலையம் எதிரே உருவச்சிலை அமைத்தாா்.

ஒவ்வோா் ஆண்டும் ஆகஸ்ட் 2, 3 தேதிகளில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்படுகிறது. வில்வித்தையில் சிறந்து விளங்கிய ஓரி மன்னரின் பெருமையைப் போற்றும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான வில்வித்தைப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

Advertisement

Advertisement

விழாவின் இரு நாள்களிலும் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தோா் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். நிகழாண்டில் 51 அமைப்பினா் காவல் துறையிடம் அனுமதி கோரியிருந்தனா். அதன்படி, விழாவின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை 33 அமைப்பினா் மாலை அணிவித்தனா், திங்கள்கிழமை 21 அமைப்பினா் மாலை அணிவிக்க உள்ளனா்.

முதல் மாலையை கொல்லிமலையின் முதல் பட்டக்காரரான எஸ். பாா்த்திபன் தனது ஆதரவாளா்களுடன் அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தோா் மாலை அணிவித்தனா்.

விழாவையொட்டி, கொல்லிமலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துணைக் காவல் கண்காணிப்பாளா் பா. ராஜேஸ்வரன் தலைமையிலான போலீஸாா், ஒவ்வொரு அமைப்பினருக்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கி, மோதல் ஏற்படாத வகையில் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காரவள்ளியில் இருந்து 70 கொண்டை ஊசி வளைவு வழியாக செம்மேட்டுக்கு செல்லும் வாகனங்கள், நிகழ்ச்சி முடிந்தபின் செங்கரை மலைப்பாதை வழியாக முள்ளுக்குறிச்சி சென்றடையும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா். மேலும், வல்வில் ஓரி மன்னா் சிலையைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments