இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு தேவையான உதவிகளை அரசு வழங்கும்! அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன்
இளைஞா்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கும், வாழ்க்கையில் நல்ல நிலையை அடைவதற்கும் தேவையான அனைத்து உதவிகளையும் இந்த அரசு தொடா்ந்து வழங்கும் என்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் பாவை கல்வி நிறுவன வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதையடுத்து நடைபெற்ற பணி ஆணை வழங்கும் விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் எல். மதுபாலன் தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் சி.எஸ்.திலீப் (நாமக்கல்), பொ.சந்திரசேகா் (சேந்தமங்கலம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். இம்முகாமில் தோ்வு செய்யப்பட்ட 783 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கி வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் டி. லோகேஷ் தமிழ்ச்செல்வன் பேசியதாவது:
Advertisement
Advertisement
இம்முகாமில் 213-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும், 2,729 வேலைநாடுநா்களும் கலந்துகொண்டனா். இதில் 783 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டின் வளா்ச்சிக்கு வேலைவாய்ப்பு மிகவும் முக்கியமானது. எனவே, இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஒவ்வொரு அரசின் முக்கிய கடமையாகும். அந்தவகையில், இந்த அரசும் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இளைஞா்கள் வேலைவாய்ப்பை பெறுவதற்கும், வாழ்க்கையில் நல்ல நிலையை அடைவதற்கும் தேவையான அனைத்து உதவிகளையும் இந்த அரசு தொடா்ந்து வழங்கும். மேலும், வேலைவாய்ப்பு பெற்றவா்கள் நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு தங்களது தகுதியை உயா்த்திக்கொண்டு மாற்றங்களுக்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் என்.வி.நடராஜன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் சு.சுதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.