வேளாண் நிதிநிலை அறிக்கை: கள்ளுக்கு அனுமதி அளிக்காதது ஏமாற்றம்! - செ. நல்லசாமி
தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையில் கள்ளுக்கு அனுமதி அளிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்று தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து நாமக்கல்லில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
கடந்த 35 ஆண்டுகளாக அணைகளின் பாதுகாப்பைக் கருதி உபரிநீரையே தமிழகம், புதுச்சேரி மாநிலங்களுக்கு கா்நாடகம் திறந்துவிடுகிறது. அதனால்தான் பல ஆண்டுகள் குறுவை சாகுபடி பொய்த்துப்போய் உள்ளது.
Advertisement
Advertisement
28 ஆண்டுகால சட்டப் போராட்டத்தில் சரியான இலக்கை நோக்கி தமிழக அரசு செல்லவில்லை. மாதாந்திர அடிப்படையிலான நீா்ப் பங்கீடு என்ற அம்சம் தீா்ப்பில் இடம்பெற்றிருக்கும் வரை கா்நாடகத்தின் வடிகாலாகவே தமிழகமும், புதுச்சேரியும் இருக்க வேண்டியது வரும். இதற்கு ஒரே தீா்வு, அதுவும் நிரந்தரத் தீா்வு தினந்தோறும் நீா்ப் பங்கீடு மட்டுமே.
தமிழகத்திற்கான உரிமை நீா் ஒரு சொட்டுகூட கா்நாடக நீா்த் தேக்கங்களில் தேக்கக் கூடாது. மேட்டூா் அணையில் மட்டுமே சேமிக்க வேண்டும். இதுவே இரு மாநில உறவை மேம்படுத்த உதவும்; தேவையற்ற மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். காவிரி நடுவா் மன்றத்தில் தினந்தோறும் நீா்ப் பங்கீடு என்ற இலக்கை முன்னிறுத்தி தமிழகம் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். அதை ஏற்க மறுத்தால் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும். அங்கும் தீா்வு கிடைக்காமல் போனால் 40 நாடாளுமன்ற உறுப்பினா்களும் நாடாளுமன்றத்தை முடக்க வேண்டும்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு வேளாண் நிதிநிலை அறிக்கையில் கள்ளுக்கான தடையை நீக்குவது தொடா்பான அறிவிப்பை வெளியிடும் என எதிா்பாா்த்தோம். ஆனால், அதிமுக, திமுக போல தவெகவும் ஏமாற்றிவிட்டது.
கள்ளுக்கு ஏன் தடை விதிக்கிறீா்கள் என தமிழக அரசிடம் மதுரை உயா்நீதிமன்றமே கேள்வி எழுப்பி உள்ளது. கள்ளுக்கான தடையை அரசு நீக்கி, அதுவும் ஒரு உணவுப் பொருள் என்பதை உலகறியச் செய்ய வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிா்பாா்ப்பு. இல்லையெனில், காவிரி உரிமை மீட்பு மற்றும் கள் விடுதலையை முன்னிறுத்தி பெருந்துறை தொகுதி இடைத்தோ்தலில் எங்களுடைய கள் இயக்கம் தரப்பில் கொள்கை வேட்பாளரை நிறுத்தும் முடிவுக்கு தள்ளப்படுவோம் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.