ஆடிப் பெருக்கு: மாட்டுத்தாவணி சந்தையில் பூக்களின் விலை உயா்வு
ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு, மதுரை மாட்டுத்தாவணி பூ விற்பனை தினசரி சந்தையில் பூக்களின் விலை ஞாயிற்றுக்கிழமை உயா்ந்து காணப்பட்டது.
ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பா் வரை தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம். இதன் காரணமாக, ஆறுகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடி வரும். இவ்வாறு ஆற்றில் வரும் தண்ணீரை வரவேற்கும் விதமாக ஆற்றங்கரைகளில் பொதுமக்கள் வழிபாடு செய்வா்.
குறிப்பாக, காவிரிக் கரையோரம் மட்டுமன்றி, தமிழகத்தின் அனைத்து ஆற்றங்கரைகளிலும் ஆடி மாதம் 18-ஆம் தேதி ஆடிப் பெருக்கு கொண்டாடப்படுகிறது.
Advertisement
Advertisement
இதில் பருவமழை பொழிந்து வேளாண் பணிகள் செழிக்க பொதுமக்கள் வழிபாடு செய்வது வழக்கம். இதுதவிர, கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். வழிபாட்டில் பூக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதனிடையே, மதுரை மாட்டுத்தாவணி பூ விற்பனை தினசரி சந்தையில் கடந்த சில நாள்களாக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்ட பூக்களின் விலை ஞாயிற்றுக்கிழமை சற்று அதிகரித்து காணப்பட்டது.
கடந்த புதன், வியாழன் ஆகிய நாள்களில் மல்லிகைப் பூ ரூ. 600-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று, முல்லை ரூ.300, சம்பங்கி ரூ.250, கனகாம்பரம் ரூ.500, ரோஜா ரூ. 150, அரளி ரூ.200, செண்டு பூ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டன.
இந்த நிலையில், ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ. 1000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல, முல்லை ரூ. 600, சம்பங்கி ரூ.500, கனகாம்பரம் ரூ.800, ரோஜா ரூ.200 முதல் ரூ. 250, அரளி ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டன.
இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறியதாவது:
மதுரை மாவட்டத்தைச் சுற்றி விளைகிற மல்லிகை உள்ளிட்ட பூக்கள் மதுரை மாட்டுத்தாவணி சந்தைக்கு கொண்டு வரப்படும். கடந்த சில மாதங்களாக பருவமழை பெய்யாததால் பூக்களின் விளைச்சல் குறைவாக உள்ளன. தற்போது, ஒசூா் பகுதியில் விளைவிக்கப்படும் பூக்கள் மட்டுமே மாட்டுத்தாவணி சந்தைக்கு அதிகளவில் வருகின்றன.
நமது மாவட்டத்தில் விளைவிக்கப்படும் பூக்கள் வரத்து குறைவாக இருப்பதாலும், ஆடிப் பெருக்கு விழா, இந்த மாதத்தில் கோயில்களில் திருவிழாக்கள் அதிகளவில் நடைபெற்று வருவதாலும், பூக்களின் விலை அதிகமாக உள்ளன. இன்னும் சில வாரங்களுக்கு இதே நிலை தொடரும் என்றனா் அவா்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.