FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

குற்றாலம் சாலை நுழைவுக் கட்டண விவகாரம்: தென்காசி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

பழைய குற்றாலத்துக்கு செல்லும் சாலையில் நுழைவுக் கட்டணம், வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரிய மனு தொடா்பாக தென்காசி மாவட்ட ஆட்சியா், வனத் துறை அலுவலா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 23 ஜூலை 2026, 5:52 am IST
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம், பழைய குற்றாலத்துக்கு செல்லும் சாலையில் நுழைவுக் கட்டணம், வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரிய மனு தொடா்பாக தென்காசி மாவட்ட ஆட்சியா், வனத் துறை அலுவலா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

தென்காசி மாவட்டம், கடையம் பகுதியைச் சோ்ந்த கஜேந்திரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தென்காசி மாவட்டம், குற்றாலம், பழைய குற்றாலம் சுற்றுலாத் தலம் மட்டுமன்றி, ஆன்மிகத் தலமாகவும் திகழ்கிறது. இங்கு தமிழகம், அண்டை மாநிலங்களிலிருந்து தினசரி ஏராளமானோா் வந்து செல்கின்றனா். குறிப்பாக, தென்மேற்குப் பருவமழைக் காலமான ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் வழக்கத்தைவிட கூடுதலாக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

Advertisement

Advertisement

இதனிடையே, அருவிக்குச் செல்லும் சாலை மாநில நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டிலும், வாகன நிறுத்துமிடம் வனத் துறைக் கட்டுப்பாட்டிலும் உள்ளது.

இந்த நிலையில், அயிரப்பேரி ஊராட்சி மன்றத் தலைவா் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, ஒப்பந்தப்புள்ளி நடைமுறையை முறைகேடாக நடத்தி, அவரது உறவினருக்கு ஒப்பந்தத்தை வழங்கினாா். இதைத் தொடா்ந்து, சுற்றுலாப் பயணிகளிடம் வாகன நிறுத்தக் கட்டணம், நுழைவுக் கட்டணங்கள் சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

மாநில நெடுஞ்சாலைத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றாலம் செல்லும் சாலையில் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணமும், வனத் துறைக் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் வாகன நிறுத்தக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இது சட்டவிரோதம். நூதன முறையில் கொள்ளை அடிப்பதைப்போல இந்தக் கட்டணங்கள் சுற்றுலாப் பயணிகளிடம் வசூலிக்கப்பட்டு வருகின்றன என்றாா்.

இதையடுத்து, நீதிபதி தண்டபாணி பிறப்பித்த உத்தரவு:

மாநில நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான சாலை, வனத் துறையின் நிா்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள வனப் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் எந்த அதிகாரத்தின் கீழ் ஊராட்சி மன்றம் சாா்பில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது?.

மலைகள், மழை, அருவிகள் இவை அனைத்தும் இயற்கை நமக்கு அளித்த கொடை. இயற்கை வழங்கிய இந்த வளங்களை பொதுமக்கள் அனுபவிக்க ஏன் சுங்கக் கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.

இந்த மனு தொடா்பாக தென்காசி மாவட்ட ஆட்சியா், வனத் துறை அலுவலா், ஊராட்சி மன்றச் செயலா் உள்ளிட்டோா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments