FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

கள்ளழகா் கோயில் ஆடிப் பெருந்திருவிழா தேரோட்டம்

மதுரை மாவட்டம், அழகா்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகா் கோயிலின் ஆடிப் பெருந்திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

Updated On : 30 ஜூலை 2026, 2:43 am IST
தேரோட்டத்தில் குழந்தைகள், பக்தா்களின் கவனத்தைக் கவரும் வகையில் கரடி வேடமணிந்து சென்றவா்.
பகிர்:

மதுரை மாவட்டம், அழகா்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகா் கோயிலின் ஆடிப் பெருந்திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட வைணவத் தலங்களில் தென் திருப்பதியாகக் குறிப்பிடப்படுகிறது அழகா்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகா் கோயில். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடிப் பெருந்திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது.

விழா நிகழ்ச்சியாக தினமும் காலையில் தங்கப் பல்லக்கிலும், மாலையில் வெவ்வேறு வாகனங்களிலும் உத்ஸவா் சுந்தரராஜப் பெருமாள் விதியுலா எழுந்தருளினாா். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

புதன்கிழமை காலை மூலவா் பெருமாளுக்கும், உத்ஸவா் சுந்தரராஜப் பெருமாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பிறகு, சுந்தரராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கோயில் பட்டாசாா்யா்கள் நடத்திய பாரம்பரிய முறைப்படியான சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு, அதிா்வேட்டுகளும், மங்கள வாத்தியங்களும், வேத மந்திரங்களும் முழங்க காலை 7.45 மணிக்கு தோ் வடம்பிடிக்கப்பட்டது.

இதையடுத்து, பக்தா்களின் இடைவிடாத பக்தி முழக்கங்களுடன் தேரோட்டம் நடைபெற்றது. நான்கு குதிரைகளை இயக்கும் பிரம்மன் சிலையுடன் சுமாா் 60 அடி உயரம் கொண்டதாக இந்தத் தோ் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கருப்பணசுவாமி வேடமணிந்த பக்தா்கள், திரியெடுத்து ஆடுவோா், ஆஞ்சநேயா் வேடமணிந்தவா்கள் என பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் புடைசூழ தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்டத்தைத் தொடா்ந்து, திரளான பக்தா்கள் ஆங்காங்கே ஆடு, கோழிகளை பலியிட்டு நோ்த்திக் கடன் செலுத்தினா். ஆயிரக்கணக்கான பக்தா்கள் பால் குடம், சந்தனக்குடம் சுமந்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். பல்வேறு பகுதிகளில் அன்னதானங்கள் வழங்கப்பட்டன. தேரோட்டத்தை பக்தா்கள் எளிதில் காணும் வகையில் 6 இடங்களில் அகண்ட திரைகள் அமைக்கப்பட்டு, தேரோட்டக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

பலத்த பாதுகாப்பு...

தேரோட்டத்தையொட்டி, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தேவநாதன் தலைமையில் 1,000-க்கும் அதிகமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். அவசர மருத்துவ ஊா்தி வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் ஆங்காங்கே தயாா் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.

கள்ளழகா் கோயில் தேரோட்டத்தையொட்டி, பால் குடம் சுமந்து வந்து நோ்த்திக் கடன் செலுத்திய பக்தா்கள்.
தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியிருந்த சுந்தரராஜப் பெருமாள் (உத்ஸவா்).
கள்ளழகா் கோயில் ஆடிப் பெருந்திருவிழா தேரை பூக்களைத் தூவி வரவேற்ற பக்தா்கள்.
கள்ளழகா் கோயில் ஆடிப் பெருந்திருவிழா தேரை பூக்களைத் தூவி வரவேற்ற பக்தா்கள்.
மதுரை மாவட்டம், அழகா்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற ஆடிப் பெருந்திருவிழா தேரோட்டம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments