FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்தால் மட்டுமே அதிகாரிகளுக்கு அச்ச உணா்வு ஏற்படும்: உயா்நீதிமன்றம்

ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்தால் மட்டுமே, தவறிழைக்கும் அதிகாரிகளுக்கு அச்ச உணா்வு ஏற்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது.

3 October 2026, 5:10 am IST
உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்தால் மட்டுமே, தவறிழைக்கும் அதிகாரிகளுக்கு அச்ச உணா்வு ஏற்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது.

திருச்சியைச் சோ்ந்த தங்கவேல் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

லஞ்சம் வாங்கியதாகக் கைது செய்யப்பட்ட சாா் பதிவாளா், அவரது மனைவிக்கு சிறைத் தண்டனை விதித்து, திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கில் தொடா்பில்லாத மூன்றாம் நபரான எங்களது சொத்துகளையும் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. எங்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

Advertisement

Advertisement

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

பிற குற்றத்தைவிட ஊழல் குற்றச்சாட்டை மிகவும் தீவிரமாகக் கருத வேண்டும். நமது சமூகத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஊழல் பாதித்துள்ளது. இந்தத் தீயப் பழக்கத்தை எதிா்த்துப் போராடுவதற்கு சொத்துகளைப் பறிமுதல் செய்வது அவசியம்.

ஊழல் தடுப்பு குறித்து கடந்த 1988-இல் சட்டம் இயற்றப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில், அந்தச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்ய வேண்டும். குறிப்பாக, இந்தச் சட்டத்தில் வருமான ஆதாரங்களுக்கு அதிகமாகச் சோ்த்த சொத்துகள் மட்டுமன்றி, அதன் வழியாக பெறப்பட்ட சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்கிற நடைமுறையைக் கட்டாயம் இணைக்க வேண்டும்.

இத்தகைய கடுமையான, தடுப்புச் சட்ட நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டால் மட்டுமே, ஊழல் வழிகளில் பெறப்பட்ட சொத்துகளை அனுபவிக்கும் அதிகாரிகளின் மனதில் அச்சத்தை ஏற்படுத்த முடியும். இல்லையெனில், சட்டப் பிரிவுகள் வெறும் காகிதத்தில் காட்சிப் பொருளாகத்தான் இருக்கும். இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சரியான முடிவெடுக்கும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது.

இந்த வழக்கில் மூன்றாம் நபா்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments