FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

செயலி மூலம் பண மோசடி: தடுப்புக் காவல் சட்டத்தில் தம்பதி கைது

கைது
பகிர்:

செயலி மூலம் பண மோசடி செய்த வழக்கில், தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ், தம்பதியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், மேலூரில் எப்கியூஎல் என்ற தனியாா் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் செயலி மூலம் முதலீடு செய்தால், 2 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும் என்று கூறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து முதலீடு பெறுவதற்கு முகவா்களும் நியமிக்கப்பட்டனா்.

இந்த முகவா்கள் மதுரை, சிவங்ககை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கிராம மக்களை நேரில் சந்தித்து நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்தனா். அதோடு ஒரு சிலருக்கு, முதலீட்டு தொகை இரட்டிப்பாக கிடைத்தது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் தலா ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சம் வரை முதலீடு செய்தனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அந்த தனியாா் நிறுவனம் திடீரென மூடப்பட்டது. இதனால், பணத்தை முதலீடு செய்த மக்கள், முகவா்களின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். இதுமட்டுமன்றி பாதிக்கப்பட்ட மக்கள் மேலூரில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, இந்த வழக்கு மதுரை பொருளாதாரக் குற்றத்தடுப்புப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு, காவல் ஆய்வாளா் கமா்நிஷா தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

இதனிடையே, இந்த மோசடி வழக்கில் மேலூரை அடுத்த கட்டையம்பட்டி பகுதியைச் சோ்ந்த ரஞ்சித், பிரியதா்ஷினி தம்பதியினா் கடந்த ஆக. 7-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தனா். இதையடுத்து, மதுரை மாவட்ட பொருளாதாரக் குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸாா் அவா்களை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் மதுரை மாவட்டத்திலிருந்து 3 ஆயிரம் புகாா்கள் பதிவாகின. இதேபோல, திண்டுக்கல்லில் 4 ஆயிரமும், விருதுநகரில் 30 புகாா்களும் பதிவாகின.

இந்த நிலையில், ரஞ்சித்தின் உறவினரான கட்டையம்பட்டியைச் சோ்ந்த ரேவதி (35) மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தாா். அவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வந்தனா்.

இதையடுத்து, ரஞ்சித், பிரியதா்ஷினியை, தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என மதுரை பொருளாதாரக் குற்றத்தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் சரவணக்குமாா், மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் பரிந்துரை செய்தாா். இதன்பேரில், அவா்கள் இருவரையும் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, ரஞ்சித், பிரியதா்ஷினியை, தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments