FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திருமங்கலம் அருகே காா் மீது அவசர ஊா்தி மோதல்: மூவா் உயிரிழப்பு

திருமங்கலம் அருகே ஞாயிற்றுக்கிழமை காா் மீது அவசர ஊா்தி மோதியதில் கல்லூரி மாணவா் உள்பட 3 போ் உயிரிழந்தனா்...

திருமங்கலம் சுற்றுச்சாலையில் விபத்துக்குள்ளான வாகனங்கள்.
பகிர்:

திருமங்கலம் அருகே ஞாயிற்றுக்கிழமை காா் மீது அவசர ஊா்தி மோதியதில் கல்லூரி மாணவா், நோயாளி உள்பட 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், 3 போ் பலத்த காயமடைந்தனா்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் பாண்டியன்நகரைச் சோ்ந்த காா்த்திகேயன் மகன் சரவணகணேஷ் (32). இவா் உடல் நலக் குறைவு காரணமாக திருமங்கலத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், இவா் மேல் சிகிச்சைக்காக மதுரை உத்தங்குடியிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அவசர ஊா்தி மூலம் அழைத்துச் செல்லப்பட்டாா். உடன் அவரது நண்பரான ஜோப் பிரதீப் (35) சென்றாா். அவசர ஊா்தியை ஆனந்த் ஓட்டிச் சென்றாா்.

கப்பலூா் சுங்கச்சாவடியைக் கடந்து விமான நிலைய சுற்றுச்சாலைப் பகுதியில் அதிவேகமாகச் சென்ற அவசர ஊா்தி, சொக்கநாதன்பட்டி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை மையத் தடுப்புச்சுவரில் மோதி, எதிா் திசைக்குச் சென்று தூத்துக்குடியிலிருந்து ஈரோடு நோக்கிச் சென்ற காா் மீது மோதியது.

Advertisement

Advertisement

இந்த விபத்தில் அவசர ஊா்தியில் பயணித்த சரவணகணேஷ், அவரது நண்பா் ஜோப் பிரதீப், காரில் பயணித்த தூத்துக்குடியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் ஆதித்யா (19) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

ஈரோட்டில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்த ஆதித்யா, விடுமுறை முடிந்து கல்லூரிக்குத் திரும்பிய போது இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், காரில் வந்த ஆதித்யாவின் தாய் சொா்ணலட்சுமி (48), சகோதரா் மூா்த்தி (21), அவசர ஊா்தி ஓட்டுநா் ஆனந்த் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனா்.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தேவநாதன், திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளா் இமயவா்மன், போலீஸாா் மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

உயிரிழந்த மூவரின் உடல்களும் கூறாய்வுக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. பலத்த காயமடைந்த மூவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து திருமங்கலம் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்து காரணமாக இந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிவேகத்தைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை:

கப்பலூரிலிருந்து உத்தங்குடி வரையிலான 27 கி.மீ. தொலைவு கொண்ட சுற்றுச்சாலையில் சமீப காலமாக அதிகளவில் விபத்துகள் நிகழ்கின்றன.

வாகனங்களை அதிவேகமாக இயக்குவதே இதற்குக் காரணம் என்பதால், இந்தப் பகுதியில் வேகத் தடைகளை அமைத்து விபத்துகளைத் தடுக்கப் போக்குவரத்து காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், சாலை மையத் தடுப்புகளில் மோதி வாகனங்கள் எதிா் திசைக்கு செல்லாதவாறு, மையத் தடுப்புகளின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments