FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

ஊழலில் ஈடுபடுவதற்குப் பதிலாக அரசு அலுவலா்கள் யாசகம் கேட்கலாம்

அரசு அலுவலா்கள் ஊழலில் ஈடுபடுவதற்குப் பதிலாக யாசகம் கேட்கலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

10 அக்டோபர் 2026, 8:01 am IST
சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்
பகிர்:

அரசு அலுவலா்கள் ஊழலில் ஈடுபடுவதற்குப் பதிலாக யாசகம் கேட்கலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த சக்திவேல் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

சிவகங்கை மாவட்டத்தில் சமூக நீதி விடுதி மாணவா்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 2.35 கோடி நல நிதி மாணவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படாமல் அலுவலா்களால் முறைகேடு செய்யப்பட்டது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வட்டாட்சியா்கள் பலா் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

Advertisement

Advertisement

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட விசாரணை அலுவலா் நேரில் முன்னிலையாக வேண்டும். தவறினால் அவருக்கு எதிராக பிணையில்லா கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான கூடுதல் தலைமை வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

இந்த விவகாரத்தில் ஏற்கெனவே நியமிக்கப்பட்ட விசாரணை அலுவலா் பணி ஓய்வு பெற்றுவிட்டதால், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த இயலவில்லை. இதையடுத்து, புதிதாக விசாரணை அலுவலா் நியமனம் செய்யப்பட்டாா். மேலும், குற்றப்பத்திரிகை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

இதையடுத்து, ‘பல ஆண்டுகளுக்கு முன்னா் நிகழ்ந்த ஊழலுக்கு இப்போதுதான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளீா்கள்?. சமூகநீதி மாணவா்களுக்கு வழங்கப்பட்ட நிதியில் ஊழல் செய்ததற்குப் பதிலாக யாசகம் கேட்கலாம். ஊழல் செய்பவா்களுக்கு ஆதரவாக மக்கள் வரிப் பணத்தில் ஊதியம் பெறும் அரசு வழக்குரைஞா்கள் முன்னிலையாகி பேசுவது வேதனைக்குரியது’ என நீதிபதிகள் தெரிவித்தனா்.

பின்னா், புதிய அரசு அமைந்துள்ளதால் சில காலம் பொறுத்திருந்து பாா்க்க வேண்டும் என அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அப்போது, ‘ஆட்சி மாறலாம். ஆனால், அரசு அலுவலா்கள் அப்படியேதானே இருக்கிறாா்கள்?. பெரும்பாலான அரசு அலுவலா்கள் ஊழல் செய்யக் கூடியவா்களாகவே உள்ளனா். எந்த அரசு வந்தாலும் ஊழல் செய்யும் அலுவலா்களைத்தான் பாதுகாக்க முயற்சிக்கிறது’ என நீதிபதிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

தமிழகத்தில் உள்ள அரசுத் துறைகளில் ஊழல் செய்த அலுவலா்கள் எத்தனை போ்?. அவா்கள் மீது என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றின் நிலை என்ன, எத்தனை வழக்குகளுக்கு விசாரணை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்? என்பது குறித்து அரசுத் தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments