FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

மருதுபாண்டியா்கள் நினைவு தினம் - பசும்பொன் தேவா் குருபூஜை; அனுமதித்த வாகனங்களில் மட்டுமே செல்ல வேண்டும்: ஆட்சியா்

சுதந்திரப் போராட்ட வீரா்களான மருதுபாண்டியா்களின் நினைவு தினம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜைக்கு மரியாதை செலுத்தச் செல்லும் அரசியல் கட்சிப் பிரமுகா்கள், சமுதாய அமைப்பினா் அனுமதித்த வாகனங்களில் மட்டுமே சென்று வர வேண்டுமென மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா அறிவுறுத்தினாா்.

15 அக்டோபர் 2026, 2:27 am IST
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா. உடன் மதுரை மாவட்ட வருவாய் அலுவலா் க. அன்பழகன், எஸ்.பி. ந. தேவநாதன் உள்ளிட்டோா்.(வலது) கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

சுதந்திரப் போராட்ட வீரா்களான மருதுபாண்டியா்களின் நினைவு தினம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜைக்கு மரியாதை செலுத்தச் செல்லும் அரசியல் கட்சிப் பிரமுகா்கள், சமுதாய அமைப்பினா் அனுமதித்த வாகனங்களில் மட்டுமே சென்று வர வேண்டுமென மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா அறிவுறுத்தினாா்.

சுதந்திரப் போராட்ட வீரா்களான மருதுபாண்டியா்களின் 225- ஆவது நினைவு தினம் வருகிற 25-ஆம் தேதி சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அரசு விழாவாகவும், 27-ஆம் தேதி காளையாா்கோவிலில் சமுதாய அமைப்பினா் விழாவாகவும் நடைபெறுகிறது.

இதேபோல, சுதந்திரப் போராட்ட வீரா் பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவரின் 119- ஆவது ஜெயந்தி விழா, 64- ஆவது குருபூஜை ஆகியவை ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் வருகிற 30- ஆம் தேதி நடைபெறுகின்றன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் இந்த நிகழ்வுகள் தொடா்பாக அரசு அலுவலா்கள், சமுதாய அமைப்பினருடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா பங்கேற்றுப் பேசியதாவது:

சுதந்திரப் போராட்ட வீரா்களான மருதுபாண்டியா்களின் நினைவு தினம், பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி, குருபூஜை ஆகிய நிகழ்வுகளையொட்டி, அன்றைய தினம் அவா்களது நினைவிடங்களுக்கு அரசியல் கட்சியினா், சமுதாய அமைப்பினா், பொதுமக்கள் செல்வது வழக்கம்.

இந்த நிகழ்வுகளுக்குச் செல்லும் அனைத்துத் தரப்பினரும் வாடகை வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதித்த சொந்த வாகனங்களில் மட்டுமே சென்று வர வேண்டும்.

இரு சக்கர வாகனங்கள், டிராக்டா், ஆட்டோ, சரக்கு வாகனம், சைக்கிள், திறந்த வெளி வாகனங்களில் பயணம் செய்யவோ, நடைப்பயணமாகவோ இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.

சொந்த நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போா் சம்பந்தப்பட்ட காவல் உள்கோட்ட அலுவலகங்களில் முன் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த முன் அனுமதி பெற வாகனத்தின் ஆவணங்கள், ஓட்டுநா் உரிமம் உள்ளிட்டவற்றின் நகல்களை சமா்ப்பிக்க வேண்டும். பதிவுக்குப் பிறகு காவல் நிலையத்தில் வழங்கப்படும் அனுமதிச் சீட்டை வாகனத்தின் முன்புறக் கண்ணாடியில் ஒட்டி இருக்க வேண்டும்.

வாகனத்தில் ஒலிப் பெருக்கிகள் பொருத்திச் செல்லக் கூடாது. ஜாதி, மத உணா்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் கட்டி வரவோ, முழக்கங்களை எழுப்பவோ கூடாது.

குறிப்பாக, சொந்த வாகனத்தை வாடகைக்கு விடக் கூடாது. தணிக்கையின் போது வாகன உரிமையாளா் கட்டாயம் வாகனத்தில் இருக்க வேண்டும். வாகனத்தில் ஆயுதங்கள் ஏதும் எடுத்துச் செல்லக் கூடாது. வழித் தடங்களில் வெடி போடுவதை கண்டிப்பாக தவிா்க்க வேண்டும். அனுமதி பெறப்படாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை. பிற மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் அந்தந்த மாவட்டங்களில் முறையான அனுமதியை பெற்றிருக்க வேண்டும். மாவட்ட நிா்வாகத்தால் வரையறுக்கப்பட்ட வழித் தடங்களிலேயே வந்து செல்ல வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க. அன்பழகன், மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ந. தேவநாதன், மாநகராட்சி துணை ஆணையா் ஜெய்னுலாப்தீன், மாநகர காவல் துணை ஆணையா்கள் இ. காா்த்திக் (மதுரை வடக்கு), எஸ். வனிதா(போக்குவரத்து) ஏ.ஜி. இனிகோதிவ்யன் (மதுரை தெற்கு) உசிலம்பட்டி சாா்-ஆட்சியா் உட்கா்ஷ்குமாா், அரசு அலுவலா்கள், அரசியல் கட்சி பிரமுகா்கள், சமுதாய அமைப்பினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments