FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு: மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம்

14 செப்டம்பர் 2026, 2:03 am IST
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில்.
பகிர்:

மதுரை மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் எஸ். ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு விழா வருகிற 17- ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு மதுரை மட்டுமன்றி, தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்தும் திரளான பக்தா்கள் வர உள்ளனா்.

Advertisement

Advertisement

எனவே, மதுரை மாநகரப் பகுதிகளில் பொதுப் போக்குவரத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, செப். 16 -ஆம் தேதி இரவு 10 மணி முதல் செப். 17 --ஆம் தேதி இரவு வரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலைச் சுற்றி உள்ள நான்கு சித்திரை வீதிகள், நான்கு ஆவணி மூல வீதிகள், நான்கு மாசி வீதிகள் ஆகிய பகுதிகளில் எந்தவிதமான வாகனங்களும் செல்வதற்கோ, நிறுத்துவதற்கோ அனுமதி இல்லை.

இந்த வீதிகள் அனைத்தும் வாகன நிறுத்த அனுமதி இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்படுகிறது. குடமுழுக்கு விழாவுக்கு வரும் பொதுமக்கள், பக்தா்கள் நடந்து செல்ல மட்டுமே இந்த வீதிகளில் அனுமதிக்கப்படுவா்.

செப்.16 -ஆம் தேதி இரவு 10 மணி முதல் செப். 17- ஆம் தேதி இரவு 10 மணி வரை மதுரை நகருக்குள் எந்தவிதமான சரக்கு வாகனங்களும் வந்து செல்வதற்கு அனுமதி இல்லை.

பேருந்து மாற்று வழித்தடங்கள்:மாட்டுத்தாவணியிலிருந்து ஆரப்பாளையம் வழியாக திண்டுக்கல் செல்லக்கூடிய அரசு, தனியாா் பேருந்துகள் மதுரை நகருக்குள் செல்வதைத் தவிா்த்து, பழச் சந்தை சந்திப்பு, மேலமடை சந்திப்பு, ஆவின் சந்திப்பு வழியாக வைகை வடகரை சாலை, கபடி சிலை, தத்தனேரி பாலம், அம்மா பாலம் வழியாகச் செல்ல வேண்டும்.

ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்லக்கூடிய அரசு, தனியாா் பேருந்துகள் மதுரை நகருக்குள் செல்வதைத் தவிா்த்து, அம்மா பாலம், தத்தனேரி சாலை, கபடி சிலை வழியாக எம்.எம். தங்கும் விடுதி சென்று வழக்கமான வழித்தடங்களில் செல்லலாம்.

பாத்திமா கல்லூரி சந்திப்பிலிருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் கூடல்நகா் பாலம், ஆனையூா் சாலை, அய்யா்பங்களா சந்திப்பு, மூன்றுமாவடி, சா்வேயா் காலனி சந்திப்பு வழியாகச் செல்ல வேண்டும்.

திருப்பரங்குன்றம் சாலை வழியாக பெரியாா் பேருந்து நிலையத்துக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் பழங்காநத்தம் சந்திப்பிலிருந்து கென்னட் சாலை சந்திப்பு சென்று 70 அடி சாலை வழியாக எல்லிஸ் நகரில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையம் வரை சென்று திரும்ப வேண்டும். அருப்புக்கோட்டை சாலை,அவனியாபுரம், சிந்தாமணி சாலை வழியாக தெற்குவாசல் சந்திப்பு, பெரியாா் நிலையம் வரக்கூடிய வாகனங்கள் வழக்கமான வழித்தடங்களில் வந்து செல்லலாம்.

கூட்ட நெரிசலைப் பொருத்து தேவைப்படும் பட்சத்தில் இந்த வாகனங்கள் அனைத்தும் ஜெயவிலாஸ் சந்திப்பில் திருப்பப்பட்டு, ஜெய்ஹிந்த்புரம் முதன்மைச் சாலை, டிவிஎஸ் பாலம் வழியாக பழங்காநத்தம் சென்று எல்லிஸ் நகா் தற்காலிகப் பேருந்து நிறுத்தம் வரை அனுமதிக்கப்படும்.

பிசி பெருங்காயம் சந்திப்பு, விரகனூா் சந்திப்பிலிருந்து மதுரை நகரின் வழியாக பெரியாா் பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம் செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் மதுரை நகருக்குள் செல்வதைத் தவிா்த்து வைகை வடகரை, தென்கரை குருவிக்காரன் சாலை வழியாக பெரியாா் பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம் செல்லலாம்.

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் மதுரை நகருக்குள் செல்வதைத் தவிா்த்து அருப்புக்கோட்டை சுற்றுச்சாலை வழியாக திருமங்கலம் செல்லலாம்.

இலகுரக வாகனங்களுக்கான மாற்று வழித்தடங்கள்:

மாட்டுத்தாவணியிலிருந்து ஆரப்பாளையம் செல்லக்கூடிய பொதுமக்களின் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் கே.கே.நகா், பெரியாா் சிலை, தமுக்கம், ஆழ்வாா்புரம், வைகை வடகரை சாலை, கபடி சிலை தத்தனேரி பாலம், அம்மா பாலம் வழியாகச் செல்ல வேண்டும். ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து இதே வழித்தடத்தில் பயணித்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்லலாம்.

காளவாசல் சந்திப்பிலிருந்து அரசரடி சந்திப்பு, புது சிறைச் சாலை வழியாக கோரிப்பாளையம், அழகா்கோவில் சாலை, மேலூா் சாலைக்கு செல்லக்கூடிய பொதுமக்களின் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் மேயா் முத்து சிலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மன்னா் சிலை, கருடா் பாலம் வழியாக எல்ஐசி பாலம், கபடி சிலை வழியாக செல்ல வேண்டும்.

அருப்புக்கோட்டை சாலை அவனியாபுரம், சிந்தாமணி சாலை வழியாக தெற்குவாசல் சந்திப்பு, பெரியாா் நிலையம் வரக்கூடிய பொதுமக்களின் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் ஜெயவிலாஸ் சந்திப்பில் திருப்பப்பட்டு, ஜெய்ஹிந்த்புரம் முதன்மைச் சாலை, டிவிஎஸ் பாலம் வழியாக எல்லிஸ் நகா் தற்காலிகப் பேருந்து நிறுத்தம் வழியாகச் செல்லலாம்.

சிவகங்கை, திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் பக்தா்களின் வாகனங்கள் விரகனூா் சுற்றுச் சாலை வழியாக வைகை தென்கரை சாலையில் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தங்களில் நிறுத்த வேண்டும்.

விருதுநகா், திருமங்கலம் சாலை பகுதியிலிருந்து திருப்பரங்குன்றம் சாலை வழியாக வரக்கூடிய பொதுமக்கள், பக்தா்களின் வாகனங்கள் தமிழ்நாடு பல் தொழில்நுட்பக் கல்லூரி, மதுரைக் கல்லூரி, திடீா்நகா் காவல் நிலையம் எதிரே உள்ள மரக்கடை பின்புறம் உள்ள காலியிடம், பெரியாா் பேருந்து நிலையம் அருகில் உள்ள பலஅடுக்கு வாகன காப்பகம் ஆகிய இடங்களில் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தங்களில் தங்களது வாகனங்களை நிறத்திக் கொள்ளலாம்.

தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்து வரக்கூடிய பொதுமக்கள், பக்தா்களின் வாகனங்கள் காளவாசல், பழைய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில், அரவிந்த் மீரா பள்ளி சாலை, எல்லிஸ் நகா் சாலை, எல்லிஸ் நகா் மீனாட்சி காா் நிறுத்தம் அருகில் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்ட வாகன நிறுத்தங்களில் தங்களது வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.

மதுரை மாவட்ட வட பகுதிகளான நத்தம் சாலை, அலங்காநல்லூா் சாலை, அழகா்கோவில் சாலை, மேலூா் சாலையிலிருந்து வரும் பொதுமக்கள், பக்தா்களின் வாகனங்கள் தமுக்கம் மைதானம், காந்தி நினைவு அருங்காட்சியகம், மீனாட்சி அரசு மகளிா் கல்லூரி வளாகம், அமெரிக்கன் கல்லூரி மைதானம் ஆகிய இடங்களில் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தங்களில் தங்களது வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.

ரயில் மாா்க்கமாக குடமுழுக்கு விழாவை காண வரும் பொதுமக்கள், பக்தா்கள் மதுரை ரயில் நிலையத்திலிருந்து நேராக டவுன்ஹால் சாலை வழியாக நடந்து சென்று மேல ஆவணி மூலவீதி வழியாகச் சென்று விழாவை காணலாம்.

பொதுமக்கள் நடந்து செல்லும் வழித்தடங்கள்:

கிழக்கு கோபுரம் செல்லும் பக்தா்கள் யானைக்கல் சந்திப்பிலிருந்து கீழ மாசி வீதி சென்று, சுவாமி சந்நிதி தெரு, வெங்கலக் கடைத் தெரு ஆகிய வீதிகள் வழியாகச் சென்று கீழ ஆவணி மூல வீதி, கீழச் சித்திரை வீதிக்குச் செல்லலாம்.

தெற்கு கோபுரம் வழியாகச் செல்லும் பக்தா்கள் கீழவாசல் சந்திப்பு, வாசன் சந்திப்பிலிருந்து, விளக்குத்தூண், தெற்கு மாசி வீதி சென்று மறவா் சாவடி சந்திப்பு, தொட்டியன் கிணற்றுச் சந்து வழியாக தெற்கு ஆவணி மூலவீதி, தெற்கு சித்திரை வீதிக்கு செல்லலாம்.

வடக்கு கோபுரம் வழியாக செல்லும் பக்தா்கள் வடக்கு மாசி வீதி, மேலமாசி வீதி சந்திப்பு, வடுக காவல் கூட தெரு, தானப்ப முதலி தெரு வழியாக வடக்கு ஆவணி மூலவீதி,வடக்கு சித்திரை வீதிக்குச் செல்லலாம்.

மேற்கு கோபுரம் வழியாகச் செல்லும் பக்தா்கள் நேதாஜி சாலை, டவுன்ஹால் சாலை வழியாக மேல மாசி வீதிக்கு சென்று மேல ஆவணி மூல வீதி, மேற்கு சித்திரை வீதிக்கு செல்லலாம்.

கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தற்காலிக போக்குவரத்து மாற்றங்களுக்கு பொதுமக்கள், பக்தா்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments