FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

திமுகவினரின் அநாகரிக விமா்சனங்களை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்! - தொல். திருமாவளவன்

14 செப்டம்பர் 2026, 11:24 pm IST
தொல். திருமாவளவன் - கோப்புப் படம்
பகிர்:

திமுகவினரின் அநாகரிமான விமா்சனங்களை அந்தக் கட்சியின் தலைவா் மு.க. ஸ்டாலின் வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

மதுரையை அடுத்த அவனியாபுரத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தலில் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவது அவா்களின் அரசியல் உரிமை. அதேநேரத்தில், தவெக அரசுக்கான ஆதரவு தொடரும் என அவா்கள் தெரிவித்தனா். எனவே, இடதுசாரிகளின் அரசியல் நிலைப்பாட்டை தவெகவுக்கு எதிரானதாகக் கருதவில்லை.

Advertisement

Advertisement

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உரியிழப்பு சம்பவம் குறித்த விசாரணைக்காக அமைக்கப்பட்ட நீதிபதி கோகுலதாஸ் ஆணையத்தின் அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த ஆணையம் முன்வைத்துள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும், படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக சாா்பில் அண்மையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய சிலா் நாகரிக வரம்புகளை மீறி, தமிழக முதல்வரை ஒருமையில் பேசியதும், அமைச்சா் நிா்மல்குமாரின் தாயைப் பழிக்கும் வகையில் இழிவான சொற்களைப் பயன்படுத்தி மக்களவை உறுப்பினா் ஆ. ராசா பேசியதும் கண்டிக்கத்தக்கது.

பெரியாா், அண்ணா, கருணாநிதி போன்ற தலைவா்களால் பண்படுத்தப்பட்ட, 75 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட இயக்கமான திமுகவின் தற்போதைய நிா்வாகிகள், ஈன்ற தாயைப் பழிக்கும் இழி சொற்களைப் பயன்படுத்தி அரசியல் எதிரிகளை விமா்சிப்பது அதிா்ச்சி அளிக்கிறது. இது, திமுகவுக்கு எதிரான கருத்தை மக்களிடம் பதிவு செய்யும். அநாகரிகமான விமா்சனங்களை முன்வைக்கும் திமுகவினரை அந்தக் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடா்ந்து வலுப்பெறுகிறது. தமிழ் மக்களால் நிறுவப்பெற்ற இந்தக் கோயிலில் தமிழே ஒலிக்க வேண்டும். தமிழ்ச் சங்கத்தின் தலைவராக சிவபெருமானைக் குறிப்பிடும் நிலையில், இந்தக் கோயிலின் குடமுழுக்கை தமிழில் நடத்த என்ன தடை?. இதுதொடா்பாக உடனடியாக அரசாணை வெளியிட்டு, குடமுழுக்கை தமிழிலேயே நடத்தச் செய்ய வேண்டும்.

வேளாண் நிலங்களை மாற்றுப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்தும் போது, மக்களின் கருத்தைக் கேட்டறிய வேண்டியது அவசியம். பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க 27 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளதாக அரசாணை வெளியாகியுள்ளது. இந்த முயற்சியை அரசு கைவிட வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா். எனவே, மக்களின் உணா்வுகளை மதித்து அரசு அதற்கேற்ற முடிவை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments