மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு! டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!!
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு நிகழ்வில் பக்தர்கள் மீது டிரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டதைப் பற்றி...
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு நிகழ்வில் பக்தர்கள் மீது டிரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான வரலாறு மட்டுமின்றி, தமிழ்மொழி, சங்கம், கலை மற்றும் பண்பாட்டின் தொன்மையான மையமாகத் திகழும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி, புனரமைப்புப் பணிகள் நடைபெற்றன.
குடமுழுக்கு விழாவுக்கான யாகபூஜைகள் கடந்த செப். 6-ஆம் தேதி தொடங்கின. இதற்காக அமைக்கப்பட்ட 183 யாக குண்டங்களில், செப். 11-ஆம் தேதி முதல் சிறப்பு வேள்விகள் நடைபெற்று வந்தன. திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு செப். 11 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெற்று வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு 12-ஆம் கால யாகபூஜை நிறைவடைந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
புனித நீர் கலசங்களில் நீர் நிரப்புவதற்காக புண்ணிய நதியான கங்கையிலிருந்து 1,008 லிட்டர் புனித நீரும், மேலும் 7 புண்ணிய நதிகளிலிருந்து 1,008 லிட்டர் புனித நீரும் கொண்டு வரப்பட்டிருந்தது. யாகசாலை பூஜைகள் மற்றும் திருக்குட நன்னீராட்டு விழாவில் 300-க்கும் மேற்பட்ட பட்டர்கள் பங்கேற்று பூஜைகளை முன்நின்று நடத்தினர்.
தமிழ் ஓதுவார்களின் வேத மந்திரங்களும், மேளதாள வாத்தியங்களும் முழங்க காலை 7.40 மணிக்கு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தங்க விமானங்கள், ராஜகோபுரங்களுக்கு புனித நீர் உற்றப்பட்டது. திருக்கோயிலில் உள்ள 12 கோபுரங்களில் உள்ள கலசங்களுக்கும் புனித நீர் உற்றப்பட்டு, நன்னீராட்டு விழா நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து ராஜ கோபுரங்களுக்கு சிறப்பு பூஜைகள், தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. கோயில் வளாகம், ஆடி, சித்திரை வீதிகளில் குழுமியிருந்த பக்தர்களுக்கு குடமுழுக்கு புனித நீர் டிரோன் மூலம் தெளிக்கப்பட்டது. இதனால், அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர்.
During the consecration ceremony of the Madurai Meenakshi Sundareswarar Temple, holy water was sprinkled on devotees using a drone.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.