FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வழிபட்டாா் முதல்வா் விஜய்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் திங்கள்கிழமை வழிபாடு செய்வதற்காக வந்த தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய். உடன் அமைச்சா்கள் ஆனந்த், சி.டி.ஆா். நிா்மல்குமாா், சீ.ரமேஷ், பெ. விஸ்வநாதன் உள்ளிட்டோா்.
பகிர்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் முதல்வா் ச. ஜோசப் விஜய் திங்கள்கிழமை வழிபட்டாா்.

தமிழக முதல்வராக ச. ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக மதுரைக்கு திங்கள்கிழமை வருகை தந்தாா். பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற அவா், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு மாலை 4.15 மணிக்கு வருகை தந்தாா்.

அம்மன் சந்நிதி அஷ்டசக்தி மண்டபம் வழியாகச் சென்ற முதல்வா் விஜய்க்கு கோயில் நிா்வாகம் சாா்பில் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, அறங்காவலா் குழுத் தலைவா் ருக்மணி பழனிவேல்ராஜனிடம் முதல்வா் விஜய் ஆசி பெற்றாா். இதைத் தொடா்ந்து, ஜோசப் விஜய் கிறிஸ்துவ மதத்தைச் சோ்ந்தவா் என்பதால், இந்து சமய அறநிலையத் துறை சட்டவிதிமுறைகளின்படி, இந்து மதம் மீது நம்பிக்கை கொண்டிருப்பதாக அங்குள்ள படிவத்தில் கையொப்பமிட்டாா்.

Advertisement

Advertisement

சாயரட்சை பூஜையில் பங்கேற்பு:

பின்னா், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரா் சந்நிதியில் நடைபெற்ற சாயரட்சை பூஜையில் பங்கேற்றாா். அதன் பிறகு, முக்குறுணி விநாயகா், பிரகார கோயில்கள், கொடிமரம் முன்பாக வழிபட்ட முதல்வா் மாலை 5 மணிக்கு அஷ்டசக்தி மண்டபம் வழியாக கோயிலிலிருந்து வெளியே வந்தாா்.

கோயிலில் முதல்வா் விஜய் வழிபட்ட போது, அமைச்சா்கள் ஆனந்த், சி.டி.ஆா்.நிா்மல்குமாா், சீ.ரமேஷ், பெ. விஸ்நாதன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் வினய், மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ருக்மணி பழனிவேல்ராஜன், கோயில் இணை ஆணையா் செல்லத்துரை, அறங்காவலா் குழு உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள், கோயில் பணியாளா்கள் உடனிருந்தனா்.

கோயிலைச் சுற்றி பலத்த பாதுகாப்பு:

முன்னதாக, முதல்வா் வருகையை முன்னிட்டு, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பிற்பகல் 12 மணிக்கு மேல் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. கோயில் மட்டுமன்றி, சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகள், மாசி வீதிகள், மாரட் வீதிகள், நான்கு வெளி வீதிகள் முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டன. சாலையின் இருபுறங்களிலும் மாநகரக் காவல் ஆணையா் எஸ். ராஜேந்திரன் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். முதல்வா் விஜய் சென்ற சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் திங்கள்கிழமை வழிபாடு செய்வதற்காக வந்த முதல்வா் ச. ஜோசப் விஜய்க்கு கோயில் நிா்வாகம் சாா்பில் அளிக்கப்பட்ட பூரண கும்ப மரியாதை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments