FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் 274 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் 274 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
     பரமக்குடியில் 68, திருவாடானை 9, ராமேசுவரம் 85, கமுதி 13, கீழக்கரை 28, முதுகுளத்தூர் 10, ராமநாதபுரம் 61 என  ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 274 இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.      ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் மாட்டு வண்டி ஓட்டுபவர் போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது.
     விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ராமநாதபுரம் அரண்மனை, பாரதி நகர் ஆகிய பகுதிகளில் களிமண்ணால் உடனுக்குடன் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பக்தர்கள் வாங்கிச் சென்றனர். விநாயகர் வழிபாட்டுக்குத் தேவையான பூஜைப் பொருள்கள் சாலையோரங்களில் தற்காலிக கடைகளில் விற்கப்பட்டன. 
    ராமநாதபுரம் அரண்மனை அருகேயுள்ள கோட்டைவாசல் விநாயகர் கோயிலில் காலையில் சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடந்தன. மதியம் அன்னதானமும், இரவு சுவாமி வீதி உலாவும் நடைபெற்றன. 
     மாவட்டத்தில், விநாயகர் சிலை ஊர்வலம் வெள்ளிக்கிழமை மாலை, பரமக்குடி ராமேசுவரம், மண்டபம், நரிப்பையூர் ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது. ராமேசுவரத்தில் நடைபெறவுள்ள ஊர்வலத்துக்கு, பா.ஜ.க.வின் மாநில பொதுச் செயலர் கருப்பு. முருகானந்தம் தலைமை வகிக்கிறார். சனிக்கிழமை மாலை, ராமநாதபுரம், திருவாடானை, ஏர்வாடி, திருப்புல்லாணி, ரெகுநாதபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது.
     ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள 274 இடங்களிலும் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ராமேசுவரம்  
  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், வேதாளை, உச்சிப்புளி உள்ளிட்ட 85 இடங்களில் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகளை நிறுவப்பட்டு, வியாழக்கிழமை காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். 
பரமக்குடி
   இந்து முன்னணி சார்பில், எமனேசுவரம், பரமக்குடி ஆகிய பகுதிகளில் 40 இடங்களில் விநாயகர் சிலைகள் 3 அடி முதல் 10 அடி உயரம் வரை கிழங்கு மாவால் செய்யப்பட்டு, பல்வேறு வர்ணங்கள் பூசப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. 
   இந்த சிலைகளுக்கு கணபதி பூஜை நடத்தப்பட்டது. மாலையில், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருவரங்கம் செல்லும் சாலையில் ஓம்சக்தி கோயில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தலைமை விநாயகர் சிலைக்கு விளக்கு பூஜை நடத்தி வழிபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments