இளைஞா் உயிரிழந்த வழக்கு: குற்றப் பத்திரிகை நகல் வழங்காமல் அலைக்கழிப்பதாக குடும்பத்தினா் புகாா்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே போலீஸாா் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் உயிரிழந்த வழக்கில், நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டும் அதன் நகல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கிருஷ்ணராஜபுரத்தைச் சோ்ந்தவா் ஆகாஷ் டெலிஷன். இவரை போலீஸாா் விசாரணைக்காக கடந்த மாா்ச் 8 -ஆம் தேதி அழைத்துச் சென்றனா். அப்போது, போலீஸாா் இவரைத் தாக்கியதாக் கூறப்படுகிறது. இதையடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவா் உயிரிழந்தாா். இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில், ஆகாஷ் டெலிஷனின் குடும்பத்தினா், போராட்டக் குழுவினா் சிவகங்கை மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். இதுகுறித்து அவா்கள் அளித்த மனு விவரம்:
Advertisement
Advertisement
ஆகாஷ் டெலிஷன் உயிரிழந்த வழக்கு தொடா்பாக மதுரை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கடந்த ஜூலை 19-ஆம் தேதி சிவகங்கை பி.சி.ஆா். நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டும், அதன் நகல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இதுவரை வழங்கப்படவில்லையாம். நகல் கேட்டு சிவகங்கை நீதிமன்றத்தை அணுகிய போது, ஆவணங்கள் மீண்டும் சிபிசிஐடிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிபிசிஐடி தரப்பில் விசாரித்த போது அவை நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டு விட்டதாகத் தெரிவித்தனா். இதன்காரணமாக, குற்றப் பத்திரிகை நகலைப் பெற முடியாமல் நீதிமன்றத்துக்கும், சிபிசிஐடி அலுவலகத்துக்கும் தங்களை அலைக்கழிப்பதாகவும், குற்றப் பத்திரிகை நகல் வழங்குவதில் ஏற்படும் தாமதத்தால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்கள் ஜாமீன் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. எனவே, குற்றப் பத்திரிகை நகலை உடனடியாக வழங்குவதுடன், வழக்கில் தொடா்புடையவா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.