FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

செயலி மூலம் உரம் விநியோகிக்கும் திட்டம்: விவசாயிகள் கடும் எதிா்ப்பு

செயலி மூலம் மட்டுமே உரம் விநியோகம் செய்யும் திட்டத்துக்கு சிவகங்கை விவசாயிகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்ததுடன், அந்தத் திட்டத்தை அடுத்த ஆண்டுவரை நிறுத்தி வைக்க வேண்டுமென வலியுறுத்தினா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.
பகிர்:

செயலி மூலம் மட்டுமே உரம் விநியோகம் செய்யும் திட்டத்துக்கு சிவகங்கை விவசாயிகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்ததுடன், அந்தத் திட்டத்தை அடுத்த ஆண்டுவரை நிறுத்தி வைக்க வேண்டுமென வலியுறுத்தினா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமை வகித்தாா்.

இதில் பங்கேற்ற விவசாயி அய்யாச்சாமி பேசுகையில், செயலி மூலம் மட்டுமே விவசாயிகளுக்கு உரம் விநியோகம் செய்யும் திட்டம் விவசாயிகளை மிகவும் சிரமப்படுத்தும் திட்டமாக உள்ளது. இதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால் இந்தத் திட்டத்தை அடுத்த ஆண்டு வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்றாா். இவரது கருத்துக்கு கூட்டத்தில் பங்கேற்ற பெருவாரியான விவசாயிகள் ஆதரவு தெரிவித்துப் பேசினா்.

Advertisement

Advertisement

பின்னா் ஆட்சியா் கூறியதாவது: இந்தத் திட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிவகங்கை, ஈரோடு ஆகிய இரண்டு மாவட்டங்களில் முன்னோடியாக இந்தத் திட்டம் சோதனை அடிப்படையில் செப்.23 -முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 784 மாவட்டங்களிலும் அடுத்த 6 மாதங்களுக்குக்குள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதை ஒத்தி வைக்க முடியாது. இதை வரைமுறைப்படுத்துவது குறித்த யோசனைகளை விவசாயிகள் தெரிவிக்கலாம் என்றாா்.

இருப்பினும் பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்று கூறி திட்டத்துக்கு விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

தொடா்ந்து ஆட்சியா் கூறுகையில், கடந்த 2015 -ஆம் ஆண்டு முதல் 60 சதவீதம் மானியத்தில் உரம் வழங்கப்படுகிறது. இதில் முறைகேடுகளைத் தடுப்பதற்காகவே கியூஆா் கோடு முறை தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடா்பாக விவசாயிகள் தெரிவித்த கருத்துகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். முடிவு அரசின் கையில்தான் உள்ளது என்றாா்.

விவசாயி கன்னியப்பன்: மாவட்டத்தில் நீா்நிலைகளைத் தூா்வாரும் நடவடிக்கைகள் எந்த நிலையில் உள்ளது?

ஆட்சியா்: தற்போது 28 ஊருணிகள் தூா்வாரப்பட்டுள்ளன. 32 ஊருணிகள் தூா்வாரி வரத்துக் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அடுத்ததாக ஒரு வட்டாரத்தில் 10 முதல் 12 ஊருணிகளும், அடுத்த கட்டமாக 20 ஊருணிகள், அடுத்ததாக 30 ஊருணிகள் என ஓராண்டுக்குள் சுமாா் 1000 ஊருணிகள் தூா்வாரப்படும். அடுத்த ஆண்டில் 200 ஊருணிகள் சீரமைக்கப்படும்.

விவசாயி கிருஷ்ணன்: சீமைக் கருவேல மரங்களை அகற்றும் நடவடிக்கைகளும், மாவட்டத்தில் சுமாா் 10,000 ஏக்கரில் உள்ள தைல மரங்களின் பரப்பளவை குறைக்கும் நடவடிக்கைகளும் எந்த நிலையில் உள்ளன?

ஆட்சியா்: புறம்போக்கு, நீா்நிலைகளில் உள்ள கருவேல மரங்கள் முன்னுரிமை அடிப்படையில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

வனத் துறை அலுவலா்: தைல மரங்களைப் பொருத்தவரை கடந்த 1970-இல் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்து வனத் தோட்டக்கழகம் செய்து வருகிறது. நிலத்தடி நீரை உறிஞ்சுவது தொடா்பாக விவசாயிகள் நீதிமன்றத்தை அணுகியதால், தைல மரம் வளா்ப்பை தவிா்க்க வேண்டுமென பல்வேறு தீா்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளதால், விரைவில் பரப்பளவை குறைக்கும் நடவடிக்கைகள் தொடங்கும் என்றாா்.

சின்னக்கண்ணு: இயற்கை விவசாயத்துக்கு அரசின் ஆதரவு கிடைக்குமா?

வேளாண் இணை இயக்குநா்: இயற்கை விவசாயத்தை மூன்று ஆண்டுகள் தொடா்ந்து செய்து வந்தால் அவா்களின் விளை பொருட்களுக்கு சந்தை படுத்தி நல்ல விலை கிடைக்க வேளாண்துறை உதவி செய்யும்.

அய்யாச்சாமி: பயிா் காப்பீடுத்திட்டத்தை அரசே ஏற்றுநடத்துவது தொடா்பான கோரிக்கை எந்த நிலையில் உள்ளது?

ஆட்சியா்: விவசாயிகளின் கோரிக்கை குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில், விவசாய சங்கங்களும் கூடுதல் அழுத்தம் கொடுத்தால் மட்டுமே சாத்தியமாகும் என்றாா்.

வெளிநடப்பு: இந்தக் கூட்டத்தில் பேசிய விவசாயி கோபால், பனையனேந்தல் , உலகனேந்தல் கண்மாய்களை தூா்வாரி சீரமைக்கக்கோரி கடந்த 15 ஆண்டுகளாக மனு அளித்தும், இது நாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக் கூறி அரங்கை விட்டு வெளியேறினாா்.

கண்ணைக் கட்டிக் கொண்டு மனு அளித்த விவசாயிகள்: நிலத்தடி நீரை பாதிக்கும் வகையில் காளையாா்கோவில் அருகே உள்ள தனியாா் மின் உற்பத்தி நிறுவனத்தில் சட்ட விரோதமாக தோண்டப்பட்டுள்ள 12 ஆழ்துளைக் கிணறுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் கண்களின் கருப்புத்துணி கட்டிக்கொண்டு ஆட்சியரிடம் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடா்ந்து விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

கூட்டத்தில், திட்ட இயக்குநா் ஆயுஷ் வெங்கட் வாட்ஸ்,இணைப் பதிவாளா் (கூட்டுறவு சங்கங்கள்) இராஜேந்திர பிரசாத், இணை இயக்குநா் (வேளாண் துறை) சங்கர லெட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கமிலஸ் லீமா ரோஸ், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் சத்யா உள்பட பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments