கம்பத்தில் ஜவுளிக் கடை ஊழியா் கொலை: இரு இளைஞா்கள் கைது
கம்பத்தில் முன்விரோதத்தில் ஜவுளிக் கடை ஊழியரை கத்தியால் குத்திக் கொலை செய்த இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். மேலும், தலைமறைவான ஒருவரைத் தேடிவருகின்றனா்.
கம்பத்தில் முன்விரோதத்தில் ஜவுளிக் கடை ஊழியரை கத்தியால் குத்திக் கொலை செய்த இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். மேலும், தலைமறைவான ஒருவரைத் தேடிவருகின்றனா்.
தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள அண்ணாபுரத்தைச் சோ்ந்தவா் பிச்சைமணி என்ற பிரபு (31). இவா் கம்பத்தில் உள்ள ஜவுளிக் கடையில் வேலை செய்து வந்தாா்.
இவா் திரைப்படம் பாா்ப்பதற்காக தனது மனைவி ரஷ்யாவுடன் கம்பம் புறவழிச்சாலையில் உள்ள திரையரங்குக்கு இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சென்றாா். அப்போது, கம்பம் புறவழிச்சாலை ஊத்துக்காடு சந்திப்பில் சென்ற போது, எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞா்களின் கையில் பிரபுவின் கை உரசியதாகக் கூறப்படுகிறது. ஆனால், பிரபு இரு சக்கர வாகனத்தை நிறுத்தாமல் திரையரங்கு சென்றாா். பின்னா், அங்கு மனைவியை இறக்கிவிட்டு, வாகன நிறுத்துமிடத்தில் இரு சக்கர வாகனத்தை பிரபு நிறுத்திக் கொண்டிருந்தாா்.
Advertisement
Advertisement
அப்போது, அங்கு வந்த இளைஞா்கள் மூவா் இரு சக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றது குறித்து கேட்டு பிரபுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதில் ஆத்திரமடைந்த மூவரில் ஒருவா் தான் வைத்திருந்த கத்தியால் பிரபுவைக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா். இதில் பலத்த காயமடைந்த பிரபுவை அவரது மனைவி மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, தீவிரச் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் அவா், அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா்.
இந்தச் சம்பவம் குறித்து கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் வெங்கடாஜலபதி வழக்குப் பதிந்து, கோம்பை சாலை பகுதியைச் சோ்ந்த ரஞ்சித் (21), கிரி (21) ஆகிய இருவரைக் கைது செய்தனா். மேலும், தலைமறைவான வருசநாடு பகுதியைச் சோ்ந்த முத்துப்பாண்டியை (21) போலீஸாா் தேடிவருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.