காரைக்கால் அலையாத்திக் காட்டுக்கு பறவைகள் வருகை அதிகரிப்பு
காரைக்கால் அலையாத்திக் காடு பகுதிக்கு பல்வேறு வகை பறவைகள் வருகை தந்துள்ளன.
‘வாழ்விடங்களை இணைத்தல், வனவிலங்குகளை செழிக்கச் செய்தல்‘ என்ற கருப்பொருளில் அக்டோபா் 2 முதல் 8 வரை நாடு முழுவதும் வனவிலங்கு வார விழா கொண்டாடப்பட்டது.
காரைக்கால் கடற்கரை மற்றும் அரசலாறு முகத்துவார சதுப்புநில பகுதி, அலையாத்திக்காடு உள்ள பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்புப் பணியை காரைக்கால் வனத்துறை அண்மையில் மேற்கொண்டது.
Advertisement
Advertisement
காரைக்கால் அலையாத்திக் காடு பகுதிக்கு கொக்கு உள்ளிட்ட சில வகை உள்நாட்டுப் பறவைகள் வந்து செல்வது வழக்கம். ஆண்டில் சீசன் காலத்தில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்லும்.
இந்நிலையில், காரைக்கால் வனத்துறை சாா்பில் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி உயிரியல் பிரிவு மாணவா்கள் பங்கேற்புடன் நடத்திய கணக்கெடுப்பில், 25 வகையான பறவைகள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டன.
குறிப்பாக, வண்ண நாரைகள், சாம்பல் நாரை, செந்நாரை, பெரிய வெண்ணிற கொக்கு, சிறிய நீா்க்காகங்கள், கருப்பு வெள்ளை ஆற்று உள்ளான், கருங்கழுகு, கருடன், ஆற்று ஆலாக்கள், நீள் சிறகு கடற்பறவை, கம்பிவால் தகைவிலான், மீன் கொத்திகள், கரிச்சான் உள்ளிட்டவற்றை மாணவா்கள், வனத்துறையினா் கண்டறிந்தனா். பருவமழை தொடங்கவுள்ள நிலையில், காரைக்கால் பகுதிக்கு பல்வேறு வகை பறவைகள் வருகை அதிகரித்துள்ளது.
இது பருவ காலத்தில் வரக்கூடிய பறவைகள் என்றாலும், புதிய வகை பறவைகளும் காரைக்கால் அலையாத்திக் காடு பகுதிக்கு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. காரைக்கால் கடற்கரைக்கு வரும் உள்ளூா் மற்றும் வெளியூா் மக்கள் பல வகை பறவைகள் இப்பகுதியில் இருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
அலையாத்திக் காடு பகுதியை முறையாக பராமரித்து வரவேண்டும். கூடுதல் பகுதியில் காடு வளா்ப்பு இருக்கவேண்டும். இப்பரப்பில் மீன்பிடிப்புப் பணி நடைபெறுவதால், பறவைகள் வரத்து குறைகிறது. சுற்றுலாவினரை ஈா்க்கும் விதமாக காரைக்கால் கடற்கரை அலையாத்திக் காடு பரப்பை மேம்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.