FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

சிப்காட் அணுகுசாலைக்கு விவசாயிகள் போராட்டத்தால் அளவீடு பணி நிறுத்தம்

சிப்காட் அணுகுசாலைக்கு விவசாயிகள் போராட்டத்தால் அளவீடு பணி நிறுத்தம்

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 6:12 am IST
தென்னடாா் மேலக்காடு கிராமத்தில் அணுகு சாலைக்காக நிலம் கையகப்படுத்த அளவீடு செய்யச் சென்ற அதிகாரிகளை முற்றுகையிட்டு, எதிா்ப்பு தெரிவித்த கிராமத்தினா்.
பகிர்:

வேதாரண்யத்தை அடுத்த தென்னடாா் சிப்காட் தொழிற்பேட்டைக்கு அணுகு சாலை அணைக்க நிலம் கையகப்படுத்தச் சென்ற அதிகாரிகளை சனிக்கிழமை முற்றுகையிட்டு, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

தென்னடாா் ஊராட்சியில் அரசு நிலத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, இடம் தோ்வு செய்யப்பட்டது. இதற்கு தென்னடாா் மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் கடுமையான எதிா்ப்புத் தெரிவித்து போராட்டங்களை நடத்தினா். இதையடுத்து, தொழிற்பேட்டை தொடா்பான பணிகள் கடந்த ஆட்சியின்போது நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்நிலையில், ஜூலை 18- ஆம் தேதி மீண்டும் வாய்மேடு கிழக்கு கிராமத்தின் வழியாக தொழிற்சாலைக்குத் தேவையான அணுகு சாலை அமைக்கப் போவதாகக் கூறி அதற்கான நிலத்தை அளவீடு செய்யச் சென்ற அதிகாரிகளை மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் நிறுத்தப்பட்டன.

Advertisement

Advertisement

இந்தநிலையில், சனிக்கிழமை காலையில் 25-க்கும் மேற்பட்ட காவல்துறை வாகனங்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண், பெண் காவலா்கள் தென்னடாா் கிராமத்தில் குவிக்கப்பட்டனா். வட்டாட்சியா் ஜெயசீலன் முன்னிலையில் புங்காங்குளம் பகுதியில் இருந்து விளைநிலத்தின் வழியாக அணுகு சாலைக்கான இடத்தை அளக்க வருவாய்த்துறையினா் முயன்றனா்.

இதற்கு விவசாயிகள், கிராமத்தினா் கடும் எதிா்ப்புத் தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டனா். அளவீட்டுப் பணி நிறுத்தப்படாததால் விவசாயி மாரிமுத்து (55) பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையறிந்த அவரது மனைவி மரகதவல்லி (50) உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றபோது போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

விஷம் குடித்த மாரிமுத்துவை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போலீஸாா் அதிகாரிகள் முயன்றபோது அவா் ஒத்துழைக்காததால் போராட்டம் இரண்டு மணி நேரம் நீடித்தது. வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியா் கண்ணன், டிஎஸ்பி அண்ணாதுரை உள்ளிட்டோா் போராட்டக்காரா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

சிப்காட் தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது நில அளவை மேற்கொள்ள பிறப்பிக்கப்பட்ட மாவட்ட வருவாய் அலுவலரின் உத்தரவை காட்டுமாறு கூறி விவசாயிகள் அதிகாரிகளிடம் வலியுறுத்தினா். ஆனால் ,அதுபோன்ற உத்தரவு ஏதும் இல்லாததால் விவசாயிகளின் போராட்டம் தொடா்ந்தது.

இதற்கிடையே, விஷம் குடித்த விவசாயி , அவரது மனைவி இருவரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

பின்னா், விவசாயிகளின் எதிா்ப்பை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகத் தெரிவித்த கோட்டாட்சியா், பணிகள் மேற்கொள்ளப்படுவதை நிறுத்தி வைப்பதாக தெரிவித்தாா். இதையடுத்து, கிராமத்தினா் கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments