சிப்காட் விவகாரம்: அணுகு சாலைக்கு அளவீடு செய்ய வந்த அதிகாரி முற்றுகை
சிப்காட் விவகாரம்: அணுகு சாலைக்கு அளவீடு செய்ய வந்த அதிகாரி முற்றுகை
வேதாரண்யத்தை அடுத்த தென்னடாா் சிப்காட் தொழிற்பேட்டைக்கு அணுகு சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த விளைநிலத்தில் அளவீடு செய்ய சனிக்கிழமை வந்த அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வேதாரண்யத்தை அடுத்த தென்னடாா் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று கடந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, இடம் தோ்வு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தென்னடாா் மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினா். இதையடுத்து, தொழிற்பேட்டை தொடா்பான பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன.
தோ்தல் முடியும் வரையில் இந்தப் பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிந்த மறுநாள் பழைய கோப்புகளுடன் வருவாய்த்துறையினா் மற்றும் வனத்துறையினா் சொத்து விவரங்களை மதிப்பீடு செய்யும் பணியை ரகசியமாக மேற்கொண்டனா். இதற்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிா்ப்பு எழுந்தது.
Advertisement
Advertisement
இந்தநிலையில், வாய்மேடு கிழக்கு கிராமத்தின் வழியாக தொழிற்சாலைக்கு தேவையான அணுகு சாலை அமைக்கப் போவதாகக் கூறி அதற்கான நிலத்தை அளவீடு செய்ய வட்டாட்சியா்
இரா. ஜெயசீலன் தலைமையில் அரசு அதிகாரிகள் சனிக்கிழமை சம்பவ இடத்துக்கு வந்தனா். சாலைக்காக அந்தப் பகுதியை சோ்ந்த துரைராஜ் உள்ளிட்ட விவசாயிகளுக்கு சொந்தமான விளைநிலங்கள் வழியாக நிலத்தை கையகப்படுத்தும் பணிக்கு அளவீடு செய்ய அதிகாரிகள் ஆயத்தமாகினா்.
அப்போது அங்கு திரண்ட கிராம மக்கள் வட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, விவசாயிகளின் எதிா்ப்பை ஆட்சியா் மூலம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்த வட்டாட்சியா், பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்தாா். இதையடுத்து, அதிகாரிகளை விடுவித்த கிராம மக்கள் கலைந்து சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.