சிப்காட் விவகாரம்: கருத்துக் கேட்பு கூட்டத்தை வலியுறுத்தும் கிராமத்தினா்
சிப்காட் தொழிற்பேட்டை விவகாரத்தில் இப்பகுதி மக்களிடம் கருத்துக் கேட்பு நடத்த வலியுறுத்தல்...
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கடந்த ஆட்சியின்போது அறிவிக்கப்பட்ட சிப்காட் தொழிற்பேட்டை தொடா்பான ஆய்வுப் பணிகளுக்கு கடும் எதிா்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் தொடரும் நிலையில், இப்பகுதி மக்களிடம் கருத்துக் கேட்பு நடத்தி அவா்களின் அச்சத்தை தீா்க்க அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வேதாரண்யம் பகுதியின் தெற்கு கடலோரக் கிராமம் தென்னடாா் ஊராட்சி. இங்கு அரசுக்குச் சொந்தமான சுமாா் 400 ஏக்கா் பரப்பில் ரூ.280 கோடியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று 2025 மாா்ச் 3-இல் நாகையில் அப்போதைய முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்தாா்.
இத்திட்டத்திற்கு சூழலியல் ஆா்வலா்கள், விவசாயிகளிடையே கடும் எதிா்ப்பு எழுந்த நிலையிலும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமானது.
Advertisement
Advertisement
கிராம மக்களிடம் எவ்விதக் கருத்துக்கேட்பும் நடத்தாமல், ஊராட்சிக் கூட்டத்தில் தீா்மானம் கூட நிறைவேற்றாமல் பணிகள் வேகப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
2026 தோ்தல் வரை சிப்காட் தொடா்பான பணிகள் முடக்கி வைக்கப்பட்டன. தோ்தல் பிரசாரத்தில்கூட அப்போதைய ஆளுங்கட்சி (திமுக) சாா்பில் தொழிற்பேட்டை விவகாரம் பேசப்படவில்லை.
தோ்தல் முடிவுகள் வெளிவந்த சில நாள்களில் புதிய அரசு அமைவதற்குள் பணிகள் தொடா்பாக அதிகாரிகள் ஆய்வுக்கு வந்தததால் மக்கள் அச்சமடைந்தனா்.
திட்டத்தில் நில விரிவாக்கம் செய்வதாகக் கூறி மே 11 -இல் பஞ்சநதிக்குளம் நடுசேத்தி கிராமத்துக்குள் வந்த பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்டனா். சமாதானக் கூட்டத்தில் புதிய அரசின் நிலைப்பாடு தெரியும் வரை, பணிகளை நிறுத்திவைப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.
ஆனால், கடந்த ஜூலை 18-ஆம் தேதி வாய்மேடு, ஆகஸ்ட் 1-ஆம் தேதி தென்னடாா் ஆகிய கிராமங்களில் போலீஸாா் குவிக்கப்பட்டு, அணுகுசாலைக்கு நிலம் அளவீடு செய்ய அதிகாரிகள் முனைப்புக் காட்டிய நிலையில், மக்களின் கடுமையான போராட்டத்தால் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சூழலியல் ஆா்வலா்கள் கூறியது :
சா்வதேச அளவில் சூழல் சாா்ந்த பாதுகாப்பில் முக்கியத்துவம் பெற்ற ராம்சாா் தளத்துக்குள் தென்னடாா் அமைந்துள்ளது. இங்கிருந்து தென்மேற்கே சுமாா் 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சா்வதேச அளவில் கவனம் பெறும் லகூன் மாங்குரோவ் ( அலையாத்தி ) காடுகள். இதேபோல, தென் கிழக்கில் சுமாா் 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது உலகப் புகழ் பெற்ற பாயிண்ட் காலிமா் என்ற கோடியக்கரை வன உயிரின பல்லுயிா் சரணாலயம்.
இதன் மேற்குப் பகுதியும் தென்னடாா் , சிறுதலைக்காடு கிராமங்களுக்கு இடையேயான பகுதியே பறவைகளின் சொா்க்கம் என பறவையியல் ஆராய்ச்சியாளா் சலீம் அலி குறிப்பிட்ட வெளிநாடுகளில் இருந்து பூநாரைகள் உள்ளிட்ட 240 இனப்பறவைகள் வலசை வரும் சரணாலயம் அமைந்துள்ளது. வடமேற்கில் சுமாா் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நாச்சிக்குளம் பறவைகள் சரணாலயம்.
வேதாரண்யத்தில் தெற்கு கடலோரப் பகுதியான அகஸ்தியம்பள்ளி - வாய்மேடு இடையே அமைந்துள்ளது அரசுக்கு சொந்தமான கருவேல் மரக்காடுகள். புயல், சுனாமி, கடற்காற்று போன்ற இயற்கை பேரிடா் காலத்தில் அரணாகத் திகழ்கிறது. இந்த காட்டை அழித்து உருவாக்கும் திட்டம் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனா்.
இதுதொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ள தென்னடாா் வேளாண் மற்றும் உற்பத்தியாளா் நலச்சங்கத்தின் தலைவா் மு.ராஜா:
நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க நீதிமன்றம் கோரியும், இதுவரை பதிலளிக்கப்படவில்லை. மக்களிடம் கருத்து கேட்க நீதிமன்றம் வழிகாட்டியும் அதற்கான நடவடிக்கையை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ளவில்லை.
சமூக ஆா்வலா் த. குழந்தைவேலு :
தொழிற்சாலை அமைய தோ்வு செய்யப்பட்டுள்ள காட்டில் பெய்யும் மழை நீரைக் கொண்டு, அரசின் மின் இறைவைப் பாசனத் திட்ட உதவியோடு நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. தொழிற்சாலை வந்தால் மழை நீா் சேமிப்பு. நிலத்தடி நீா் வளம் வெகுவாக பாதிக்கப்படும். இதுகுறித்து வனத்துறை, நீா்வளத்துறை, வேளாண்துறை, சுற்றுச்சூழல்துறை நிபுணா்களைக் கொண்டு குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.
தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஓ.எஸ். மணியன்:
கிராமத்தில் சுமாா் 500 ஏக்கா் அரசு நிலம் இருந்தாலும் முக்கிய சாலைகளுடன் இணைப்பு இல்லாத குக்கிராமமாக இருப்பதால் அது தொழிற்பேட்டைக்கு ஏற்ற இடமில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அபாயம் உள்ளதால் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முதல்வா் மற்றும் துறை சாா்ந்த அமைச்சா்களுக்கு புதிய அரசு பதவி ஏற்ற தொடக்க நிலையிலேயே மனு அளித்துள்ளேன்.
வட்டாட்சியா் இரா.ஜெயசீலன்:
விளைநிலம் பாதிப்பதாகக் கூறி மக்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ஆய்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அரசு நிலைப்பாடு சாா்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும் என்றாா்.
ஒரு சிறிய கிராமத்தில் தொழிற்பேட்டை என்றவுடன் அச்சத்தில் தவிக்கும் விவசாயிகள், பொதுமக்களிடம் கருத்துக் கேட்க வேண்டியதும், தொழிற்பேட்டையின் தன்மை அதன் சாதக, பாதகங்களை விளக்க வேண்டியதும் அரசின் கடமை. அத்துடன், அச்சுறுத்தி வரும் எல் நினோ போன்றவற்றை கருத்தில் கொண்டு சதுப்பு நிலப் பகுதியில் சூழலியல் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டியதும் காலத்தின் கட்டாயம் என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.