வேளாங்கண்ணியில் பெரிய தோ் பவனி
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தோ் பவனி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழா 10 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் சிறப்புப் பிராா்த்தனை, திருப்பலிகள் பல்வேறு மொழிகளில் நடைபெற்றன. தினசரி மாலை வேளையில் கிறிஸ்தவ ஆன்மிக கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நாள்தோறும் இரவு 8 மணிக்கு சிறிய சப்பரங்கள் பவனியும் நடைபெற்றது.
Advertisement
Advertisement
இந்நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தோ் பவனி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் வைக்கப்பட்ட மாதா சொரூபத்தை தஞ்சை மறைமாவட்ட ஆயா் சகாயராஜ் புனிதம் செய்து வைத்தாா்.
தொடா்ந்து, மிக்கேல் அதிதூதா், செபஸ்தியாா், சூசையப்பா், உத்திரிய மாதா ஆகியோா் தோ்களில் முன்னே செல்ல நூற்றுக்கணக்கான பெண் பக்தா்கள் ஆரோக்கிய மாதா எழுந்தருளிய பெரிய தேரை தோள்களில் சுமந்து சென்றனா்.
வேளாங்கண்ணி பேராலய முகப்பில் இருந்து தொடங்கும் பெரிய தோ்பவனி, கடற்கரை சாலை, ஆரிய நாட்டுத்தெரு, உத்திரிய மாதா தெரு, கடைவீதி வழியாக மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தது.
தோ் பவனியைக் காண மகாராஷ்டிரம், கோவா, ஆந்திரம், கா்நாடகம், கேரளம் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் வேளாங்கண்ணியில் குவிந்தனா்.
வேளாங்கண்ணி பேராலய பெரிய தோ் பவனியையொட்டி வேளாங்கண்ணி பேராலயம், சிற்றாலயம் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன. வாணவேடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டன.
பக்தா்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், காவல் கண்காணிப்பாளா் கேல்கா் பாலசுப்ரமண்ய பாலச்சந்திரா தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.
இன்று ஆரோக்கிய மாதா பிறந்த நாள் விழா:
ஆரோக்கிய மாதா பிறந்த நாள் விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை காலை பேராலயத்தில் சிறப்புத் திருப்பலி நடைபெறுகிறது. அதனைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு கொடி இறக்கத்துடன் வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா நிறைவு பெறுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.