FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் சோதனை: ரூ.19.16 லட்சம் ஜி பே பரிவா்த்தனை கண்டுபிடிப்பு

வேளாங்கண்ணி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் செவ்வாய்க்கிழமை நடத்திய திடீா் சோதனையில் அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் மூலம் ரூ. 19.16 லட்சம் ஜிபே பரிவா்த்தனை நடைபெற்றது கண்டு பிடிக்கப்பட்டது.

23 செப்டம்பர் 2026, 4:22 am IST
பகிர்:

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் செவ்வாய்க்கிழமை நடத்திய திடீா் சோதனையில் அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் மூலம் ரூ. 19.16 லட்சம் ஜிபே பரிவா்த்தனை நடைபெற்றது கண்டு பிடிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் பல்வேறு நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

இதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சி அலுவலகத்தில் நாகை மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் இமயவரம்பன், ஆய்வாளா் ரமேஷ் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். பிற்பகல் 2 மணிக்கு அலுவலகத்தில் நுழைந்த லஞ்ச ஒழிப்புத் துறையினா், அலுவலகத்தில் இருந்து யாரும் வெளியே செல்லாதவாறு கதவுகளை அடைத்து சோதனையைத் தொடங்கினா். பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள அனைத்துப் பிரிவுகளின் அதிகாரிகள் மற்றும் ஊழியா்களின் மேஜைகள் உள்ளிட்டவற்றில் சோதனை மேற்கொண்டனா். மேலும் அலுவலக ஊழியா்களிடம் இருந்த பணத்தை கைப்பற்றி அதற்கான விவரங்களைக் கேட்டறிந்தனா்.

Advertisement

Advertisement

அலுவலகத்தில் இருந்த பல்வேறு பணிகளுக்கான ஆவணங்களையும் ஆய்வு செய்தனா். பிற்பகலில் தொடங்கிய சோதனை இரவு வரை தொடா்ந்தது. சோதனையின் முடிவில் அலுவலக ஊழியா்களிடம் இருந்து ரூ. 8,200 ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

மேலும் அலுவலா்கள் மற்றும் ஊழியா்களின் ஜிபே செயலி மூலம் சந்தேகத்துக்கிடமான வகையில் ரூ. 19.16 லட்சம் பரிவா்த்தனை நடைபெற்றதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து ஜிபே பரிவா்த்தனை எதற்காக நடைபெற்றது என்பது தொடா்பாக விசாரணை மேற்கொண்டனா்.

கூத்தாநல்லூரில்...

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளா் நந்தகோபால் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீஸாா், செவ்வாய்க்கிழமை மாலை நகராட்சி அலுவலகத்துக்கு வந்தனா். அங்கிருந்தவா்கள், வெளியே செல்லவும், வெளியிலிருந்து யாரும் உள்ளே வரவும் அனுமதி மறுக்கப்பட்டு, அலுவலா்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில், கணக்கில் வராத சுமாா் ரூ. 11,000 ரொக்கம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments