FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உரிய ஆய்வுக்குப் பிறகே இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கீடு: உயர் நீதிமன்றத்தில் செம்மலை தரப்பு வாதம்

"தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தரப்பு அணிக்கு

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

"தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தரப்பு அணிக்கு அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தை உரிய ஆய்வுக்குப் பிறகே தேர்தல் ஆணையம் ஒதுக்கியது; எங்கள் தரப்புக்கு எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆதரவு உள்ளது' என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணையின் போது செம்மலை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் அணிக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு நவம்பர் 23-இல் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக டி.டி.வி. தினகரன், வி.கே. சசிகலா ஆகியோர் சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் தனித் தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. அந்த உத்தரவை செல்லாதென அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் தற்போது தில்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி, சங்கீதா தீங்க்ரா ஷெகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த செப்.5-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது இந்த வழக்கில் 4-ஆவது எதிர் மனுதாரரான செம்மலை சார்பில் வழக்குரைஞர் கே.வி. விஸ்வநாதன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அதைத் தொடர்ந்து, அந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 12-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர். 
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி, சங்கீதா தீங்க்ரா ஷெகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, செம்மலை சார்பில் வழக்குரைஞர் கே.வி. விஸ்வநாதன் ஆஜராகி தனது வாதத்தைத் தொடர்ந்தார். அதில், "கட்சியில் உள்ள உறுப்பினர்கள், செயலர்கள், நாடாளுமன்ற மாநிலங்களவை, மக்களவை அதிமுக உறுப்பினர்கள், தமிழகத்திலும், புதுச்சேரியிலும் உள்ள கட்சியின் உறுப்பினர்கள் எங்கள் தரப்பை ஆதரிக்கின்றனர். கட்சி தொடர்பான அனைத்து ஆவணங்களை ஆய்வு செய்த பின்னரே தேர்தல் ஆணையம் எங்கள் தரப்புக்கு அதிமுக சின்னத்தை ஒதுக்கியது. தேர்தல் ஆணையத்தில் எங்கள் தரப்பினர் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்ததாக எதிர்த் தரப்பினர் குற்றம்சாட்டியதால், அந்த ஆவணங்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்த பிறகுதான் எங்கள் தரப்புக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது . இதனால், போலி ஆவணம் தாக்கல் செய்யப்பட்டது என்கிற எதிர்த் தரப்பினரின் குற்றச்சாட்டு பொய்யானது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இது எங்கள் தரப்பு கட்டுக்கோப்பாக இருப்பதற்கு ஒரு உதாரணமாகும்' என்று வாதிட்டார்.
அவரது வாதங்களைப் பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வியாழக்கிழமை (செப்டம்பர் 13) ஒத்திவைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments