தலைமைக் காவலர் சுட்டுக் கொலை: மர்ம நபர்கள் அட்டூழியம்
தில்லி காவல் துறையில் பணியாற்றி வந்த தலைமைக் காவலர் செவ்வாய்க்கிழமை இரவு தனது வீடு அருகே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தில்லி காவல் துறையில் பணியாற்றி வந்த தலைமைக் காவலர் செவ்வாய்க்கிழமை இரவு தனது வீடு அருகே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தில்லி காவல் துறையில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவர் ராம் அவதார். இவர் ஜெய்த்பூர் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். தெற்கு தில்லியில் உள்ள அம்பேத்கர் நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டுக்கு அருகே உள்ள கடைக்கு சென்றார். அப்போது, மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கம் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து அம்பேத்கர் நகர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் ஓ.பி. தாக்குர் கூறுகையில், "தலைமைக் காவலர் ராம் அவதார் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு தனது பணியை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். அவர் ஒரு தைரியமான அதிகாரி' என்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறை துணை ஆணையர் சின்மய் பிஸ்வால் கூறுகையில், "தலைமைக் காவலர் ராம் அவதார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தனிப்பட்ட முன்விரோதம் காரணமா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். சம்பவம் நிகழ்ந்த பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது' என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.