FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லி போராட்டத்தில் காவல் துறை அடக்குமுறை: எஸ்எஃப்ஐ கண்டனம் - நாடு தழுவிய போராட்டங்களுக்கு அழைப்பு

ஜூலை 24-ஆம் தேதி நாடு தழுவிய வகுப்புகள் புறக்கணிப்பு போராட்டம் உள்ளிட்ட அடுத்த ஐந்து நாள்களுக்கான தொடா் போராட்டங்களையும் அறிவித்துள்ளது.

Updated On : 23 ஜூலை 2026, 6:03 am IST
தில்லி காவல்துறையால் இழுத்துச் செல்லப்படும் இளைஞர் - PTI
பகிர்:

தில்லியில் நடைபெற்ற போராட்டத்தின்போது மாணவா்கள் மீது காவல் துறை மேற்கொண்ட நடவடிக்கைகளை இந்திய மாணவா் சங்கம் (எஸ்எஃப்ஐ) புதன்கிழமை கண்டித்தது. மேலும், ஜூலை 24-ஆம் தேதி நாடு தழுவிய வகுப்புகள் புறக்கணிப்பு போராட்டம் உள்ளிட்ட அடுத்த ஐந்து நாள்களுக்கான தொடா் போராட்டங்களையும் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் எஸ்எஃப்ஐ கூறியதாவது: நாடாளுமன்றத்தை நோக்கிச் சென்ற போராட்டக்காரா்களைக் கலைக்க காவல் துறை நடத்திய தடியடி, கண்ணீா்ப்புகை வீச்சு, ரப்பா் குண்டுகள் மற்றும் பெல்லட் துப்பாக்கிகள் பயன்பாடு ஆகியவற்றால் பல போராட்டக்காரா்கள் காயமடைந்தனா். மேலும், பெண் போராட்டக்காரா்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகவும், எந்தவிதத் தூண்டுதலும் இன்றி காவலா்கள் அவா்கள் மீது வன்முறையைப் பிரயோகித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

எனவே, இந்தப் பிரச்சினை தொடா்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை அணுகவுள்ளோம்; அத்துடன் ஜூலை 20-ஆம் தேதி நடந்த நிகழ்வுகள் குறித்து விசாரிக்க, முக்கியப் பிரமுகா்கள் மற்றும் முன்னாள் நீதிபதிகள் அடங்கிய சுயாதீன மக்கள் ஆணையத்தை அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

Advertisement

Advertisement

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வளாகப் போராட்டங்கள், பேரணிகள் மற்றும் தெருமுனைக் கூட்டங்களுடன் புதன்கிழமை (இன்று) நாடு தழுவிய பிரசாரம் தொடங்குகிறது.

ஜூலை 23-ஆம் தேதி (இன்று) இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், அகில இந்திய ஜனநாயக மாதா் சங்கம், அகில இந்திய கிசான் சபா, இந்திய தொழிற்சங்க மையம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் ஆதரவுடன், மாநிலங்களில் உள்ள ஆளுநா் மாளிகைகள் மற்றும் அரசுத் தலைமைச் செயலகங்களை நோக்கிய பேரணிகள் அல்லது மத்திய அரசு அலுவலகங்களுக்கு வெளியே போராட்டங்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்னையில் குடியரசுத் தலைவரின் தலையீட்டையும் நாங்கள் கோருவோம். ஜூலை 24-ஆம் தேதி நாடு தழுவிய வகுப்புகள் புறக்கணிப்பபு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே நாளில் இரவு 10 மணி முதல் ‘ராத் ஜாகோ, தேஷ் ஜாகோ’ (இரவில் விழித்திருங்கள், தேசத்தை விழித்தெழச் செய்யுங்கள்) என்ற தலைப்பில் இரவு முழுவதும் நீடிக்கும் போராட்டங்கள், தீப்பந்தப் பேரணிகள், கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகள் நாடு முழுவதும் பல இடங்களில் ஏற்பாடு செய்யப்படும்.

ஜூலை 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில், காவலா்களுக்கு ‘மெலடி’ சாக்லேட்டுகள் வழங்கப்படும் ‘ரிட்டா்ன் கிஃப்ட்‘ என்ற பிரசாரம் மேற்கொள்ளப்படும். போராட்டங்களின்போது காவல்துறையின் நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டும் பதாகைகள் மற்றும் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும்; அத்துடன் நாடு தழுவிய விழிப்புணா்வுப் பிரசாரத்தின் ஒரு பகுதியாகப் பொதுமக்களிடம் இருந்து கையொப்பங்கள் சேகரிக்கப்படும்.

கல்வி தொடா்பான பிரச்னைகளுக்காகப் போராடும் மாணவா்களுக்கு எங்கள் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்; மேலும், நாடு முழுவதும் உள்ள மக்கள் இந்தப் போராட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments