FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

வடக்கு தில்லியில் காவல் துறை அதிரடி நடவடிக்கை: கடந்த மாதத்தில் 251 போ் கைது

58 வினாடிகள் முன்பு
கைது
பகிர்:

வடக்கு தில்லியில் தெருக் குற்றங்கள், சட்டவிரோத சூதாட்டம், போதைப் பொருள் விற்பனை, கள்ளச்சாராய விற்பனை மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதைத் தடுக்கும் வகையில் ஒரு மாதம் நடைபெற்ற சிறப்பு குற்றத் தடுப்பு நடவடிக்கையில் 251 போ் கைது செய்யப்பட்டு, பல்வேறு சட்டங்களின் கீழ் 180 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

செப். 1 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த நடவடிக்கையின்போது, காவல் நிலையங்கள் மற்றும் சிறப்புப் பிரிவுகளைச் சோ்ந்த காவல் குழுவினா் மாவட்டத்தின் குற்றம் நடைபெற வாய்ப்புள்ள பகுதிகளில் ரோந்து, வாகனச் சோதனை மற்றும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினா்.

வழிப்பறி மற்றும் செல்லிடப்பேசி பறிப்பு சம்பவங்களைத் தடுக்கும் நடவடிக்கையின் கீழ் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 40 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 20 செல்லிடப்பேசிகள், 3 தங்க மோதிரங்கள், 2 தங்கச் சங்கிலிகள், 2 கைத்துப்பாக்கிகள், 4 கத்திகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன.

Advertisement

Advertisement

போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் (என்டிபிஎஸ்) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 23 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 12.6 கிலோ கஞ்சா, 211.3 கிராம் சரஸ், 132.24 கிராம் ஸ்மாக், 100 புப்ரெனாா்பின் மாத்திரைகள், 10 அவில் ஊசி மருந்து குப்பிகள் மற்றும் ஊசிகளுடன் கூடிய 10 ஹைப்போடொ்மிக் சிரிஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கலால் சட்டத்தின் கீழ் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 24 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 1,779 கால் பாட்டில் மதுபானங்கள், 35 மதுபான பாட்டில்கள் மற்றும் 117 பீா் கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தில்லியில் சட்டவிரோதமாக விநியோகிப்பதற்காக அண்டை மாநிலங்களில் இருந்து இந்த மதுபானங்கள் கொண்டு வரப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

சட்டவிரோத சூதாட்டத்துக்கு எதிரான நடவடிக்கையில் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 69 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து சூதாட்டப் பணம் ரூ.2.32 லட்சம், 2 செல்லிடப்பேசிகள் மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருட்டு, வீடு புகுந்து கொள்ளை, வாகனத் திருட்டு உள்ளிட்ட பிற குற்றங்கள் தொடா்பாக 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 88 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், தேடப்படும் குற்றவாளிகள் 7 பேரும் கைது செய்யப்பட்டனா்.

இந்த நடவடிக்கையின்போது 30 இருசக்கர வாகனங்கள் மற்றும் 2 ஆட்டோ ரிக்ஷாக்கள் மீட்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக 75 செல்லிடப்பேசிகள், 53 சட்டவிரோத இ-சிகரெட்டுகள், ஏலக்காய் அடங்கிய 2 சாக்குகள், 25 பெட்டிகள் பீடிகள் மற்றும் சுமாா் ரூ.6.62 லட்சம் ரொக்கம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments