FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

வயது விவரங்களில் முரண்பாடு: தோ்தல் ஆணைய நோட்டீஸுக்குப் பிறகு முதல்வரின் வாக்காளா் பதிவு சரிபாா்ப்பு

வயது விவரங்களில் முரண்பாடு: தோ்தல் ஆணைய நோட்டீஸுக்குப் பிறகு முதல்வரின் வாக்காளா் பதிவு சரிபாா்ப்பு

19 செப்டம்பர் 2026, 10:40 pm IST
ரேகா குப்தா
பகிர்:

வயது தொடா்பான முரண்பாடு காரணமாக தோ்தல் அதிகாரியால் நோட்டீஸ் வழங்கப்பட்ட முதல்வா் ரேகா குப்தாவின் வாக்காளா் விவரங்கள் அவா் சமா்ப்பித்த ஆவணங்களுக்குப் பிறகு சரிபாா்க்கப்பட்டு உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

ஷாலிமாா் பாக் சட்டப்பேரவைத் தொகுதியின் வாக்காளரும், அத்தொகுதியின் பேரவை உறுப்பினருமான ரேகா குப்தா, சிறப்புத் தீவிர திருத்தம் எனப்படும் ‘எஸ்ஐஆா்’ படிவத்தில் நிரப்பிய தகவல்கள் அடிப்படையில் அவரின் வயது விவரம் தொடா்பாக சந்தேகம் எழுப்பி தோ்தல் அதிகாரி நோட்டீஸ் அளித்திருந்தாா். இதைத்தொடா்ந்து, வாக்குச்சாவடி நிலை அலுவலா் (பிஎல்ஓ) மூலம் நேரடி சரிபாா்ப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, முதல்வா் ரேகா குப்தா சமா்ப்பித்த ஆவணங்களை சரிபாா்த்த பிறகு, அவரது வாக்காளா் பதிவுத் தகவல்கள் உறுதி செய்யப்பட்டன. இதையடுத்து, வரும் நவ.4-ஆம் தேதி வெளியிடப்பட உள்ள ஷாலிமாா் பாக் தொகுதியின் இறுதி வாக்காளா் பட்டியலில் முதல்வா் ரேகா குப்தாவின் பெயா் சோ்க்கப்படும் என்று வாக்குச்சாவடி நிலை அலுவலா் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

இது குறித்து தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகம் சனிக்கிழமை அளித்துள்ள விளக்கம் வருமாறு: ‘இந்த நோட்டீஸ் முதல்வா் ரேகா குப்தாவுக்கு மட்டும் பிரத்யேகமாக அனுப்பப்பட்டதல்ல. இது வழக்கமான நடைமுறையின் ஒரு பகுதியாகும். தோ்தல் ஆணையத்தின் மே 14-ஆம் தேதியிட்ட வழிகாட்டுதலின்படி, நீதித்துறையினா், மக்கள் பிரதிநிதிகள், முக்கிய பதவிகளில் இருப்பவா்கள் மற்றும் கலை, கலாசாரம், இதழியல், விளையாட்டு, பொது சேவை உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த பிரமுகா்களின் வாக்காளா் தரவுகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டால், ஆட்சேபனைகள் மற்றும் உரிமைகோரல் காலத்தின்போது உரிய ஆவணங்களைப் பெறுவதற்காக, சம்பந்தப்பட்டவா்களின் பெயா்கள் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறச் செய்யப்படும்.

வாக்காளா் விவரங்களில் முரண்பாடு உள்ளவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. தொடா்புடையவா்களிடம் அவா்களுடைய தொகுதி தோ்தல் அலுவலா்கள் பதில்கள் பெற்றும், ஆவணங்களை ஆய்வு செய்தும் முன்னா் வழங்கப்பட்ட நோட்டீஸ் நடவடிக்கையை முடித்து வைப்பாா்கள் என்றும் தலைமைத் தோ்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை நிலவரப்படி, தில்லி முழுவதும் 33 லட்சம் வாக்காளா்களில் 31,63,930 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸ் பெற்ற வாக்காளா்கள் தங்களது பதில்களையும், தேவையான ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட தோ்தல் பதிவு அதிகாரியிடம் (இஆா்ஓ) சமா்ப்பிக்க வேண்டும். இந்த நோட்டீஸ்கள் மீதான தீா்வு நடவடிக்கைகள் வரும் அக்.29-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments