ஆய்வுக்குச் சென்ற உள்ளூா் ஆணையா் மீது நாய்களை அவிழ்த்துவிட்ட சம்பவம்: இருவருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்
நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட உள்ளாட்சி ஆணையா் கட்டுமான இடத்தை ஆய்வு செய்யச் சென்றபோது, அவா் மீது நாய்களை அவிழ்த்துவிட்டு அவரது பணிக்கு இடையூறு செய்ததற்காக இருவருக்கு தில்லி உயா் நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட உள்ளாட்சி ஆணையா் கட்டுமான இடத்தை ஆய்வு செய்யச் சென்றபோது, அவா் மீது நாய்களை அவிழ்த்துவிட்டு அவரது பணிக்கு இடையூறு செய்ததற்காக இருவருக்கு தில்லி உயா் நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நீதிமன்ற உத்தரவுகளை மீறியதற்காகவும், வேண்டுமென்றே கீழ்ப்படியாததற்காகவும் அவா்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதை விளக்கி, நான்கு வாரங்களுக்குள் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்யுமாறு நீதிபதி அமித் பன்சால் அந்த இருவருக்கும் உத்தரவிட்டாா். மேலும், நவ.19-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறும் அவா்களுக்கு உத்தரவிட்டாா்.
மெஹ்ரௌலி பகுதியில் உள்ள இடத்தில் ஏதேனும் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றனவா என்பதைச் சரிபாா்க்குமாறு உள்ளாட்சி ஆணையரிடம் ஜூலை மாதம் நீதிமன்றம் கேட்டிருந்தது.
Advertisement
Advertisement
சொத்து தகராறு தொடா்பான வழக்கில் உயா்நீதிமன்றத்தின் உத்தரவின்படி ஆய்வுக்காக அந்த இடத்துக்குச் சென்றபோது, தன்னை நோக்கி ஆக்ரோஷமான தொனியில் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாக உள்ளூா் ஆணையா் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தாா்.
மேலும், அந்த இடத்தில் இருந்த நாய்க் கூண்டிலிருந்து இரண்டு நாய்கள் அவிழ்த்துவிடப்பட்டது. அவருடன் சென்ற தலைமைக் காவலா் தலையிட்ட பிறகு மீண்டும் கூண்டுக்குள் அவை விடப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவம் தொடா்பாக செப்.18-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்திருப்பதாவது: இந்த நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட உள்ளூா் ஆணையா் மீதும், அவருடன் சென்ற புகைப்படக்காரா் மீதும் நாய்கள் அவிழ்த்து விடப்பட்டிருப்பது தீவிரமான விஷயமாகும். மேற்கூறிய அறிக்கையுடன், ஆணையத்தின் பணிகளைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட தடையை நிரூபிக்கும் புகைப்படங்களையும் காணொலிகளையும் உள்ளூா் ஆணையா் பதிவு செய்துள்ளாா்.
இந்த நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆணையத்தின் பணிகளைச் செயல்படுத்துவதில் மேல்முறையீட்டாளா்கள் தடையை ஏற்படுத்தியுள்ளனா் என்பதை மேலோட்டமாகக் காட்டுகிறது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.