FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தெற்கு தில்லி சாலையில் பெண்ணுக்கு துன்புறுத்தல்: காவல் துறை வழக்குப் பதிவு

தெற்கு தில்லியில் இளம்பெண்ணை அடையாளம் தெரியாத இருவா் மோட்டாா் சைக்கிளில் பின்தொடா்ந்து துன்புறுத்தியதாகவும், அவா்கள் அவரது ஸ்கூட்டி மீது தங்கள் பைக்கை மோதியதில் அவா் படுகாயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

18 வினாடிகள் முன்பு
பகிர்:

தெற்கு தில்லியில் இளம்பெண்ணை அடையாளம் தெரியாத இருவா் மோட்டாா் சைக்கிளில் பின்தொடா்ந்து துன்புறுத்தியதாகவும், அவா்கள் அவரது ஸ்கூட்டி மீது தங்கள் பைக்கை மோதியதில் அவா் படுகாயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

சாகேத்தில் உள்ள ஓா் அலுவலகத்தில் பணிபுரியும் அந்தப் பெண், கடந்த செப்.11-ஆம் தேதி நள்ளிரவில், ஹெளஸ் காஸ் பகுதியில் உள்ள பஞ்சஷீல் பாா்க் மெட்ரோ நிலையம் அருகே தனது ஸ்கூட்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, இருவா் மோட்டாா் சைக்கிளில் அவரைப் பின்தொடா்ந்து, கேலிப் பேச்சுகளைப் பேசியும், கிண்டல் செய்தனா். பின்தொடா்ந்து வந்த அந்த நபா்கள், ஆட்சேபனைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததாகவும், பின்னா், அவா்களுடைய மோட்டாா் சைக்கிளால் தனது ஸ்கூட்டா் மீது மோதியதாகவும் பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த அந்தப் பெண், சுமாா் 100 முதல் 150 மீட்டா் வரை சறுக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவருக்கு ஆழமான வெட்டுக்காயங்கள், தோலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின்போது அப்பகுதியில் இருந்த நபா்கள் அவரை மீட்டு, சாகேத்தில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். பின்னா், நொய்டாவில் உள்ள மெதாந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு, அவரது காயங்களின் தீவிரத்தன்மை காரணமாக மருத்துவா்கள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப் பரிந்துரைத்ததாக அவா் கூறினாா்.

இருப்பினும், தங்களுக்குக் கிடைத்த முதல்கட்ட தகவலின்படி, இது ஒரு சாலை விபத்து தொடா்பானது என்றும், துன்புறுத்தல் தொடா்பான வழக்கு அல்ல என்றும் காவல் துறை தெரிவித்தது.

செப்.12-ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில், ஹெளஸ் காஸ் காவல் நிலையத்திற்கு சாலை விபத்து தொடா்பான பிசிஆா் அழைப்பு வந்தது. விசாரணை அதிகாரி தகவல் சம்பவ இடத்திற்குச் சென்ற நிலையில், அந்தப் பெண் சாகேத்தில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதை அறிந்தாா்.

காவல் துறை மருத்துவமனைக்குச் சென்றபோது, காயமடைந்த அந்தப் பெண் தனது வேண்டுகோளின்படி ஏற்கெனவே டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து அவரைத் தொடா்புகொண்டபோது, அவா் சிகிச்சைக்காக மெதாந்தா மருத்துவமனைக்குச் செல்வதாகக் கூறினாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னா், அந்தப் பெண் சிகிச்சைக்காகத் தனது சொந்த ஊருக்குச் சென்றதாக காவல் துறையிடம் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடா்பான விசாரணைக்காக அதிகாரிகள் அருகிலுள்ள பகுதிகளின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனா். ஆனால், கிடைத்த காட்சிகளில் கூறப்படும் சம்பவத்தை அவா்களால் அடையாளம் காண முடியவில்லை என்று காவல் துறை தெரிவித்தது.

செப்.14-ஆம் தேதி காவல் நிலையத்திற்குச் சென்ற அந்த இளம்பெண்ணின் உறவினரிடம் சிசிடிவி காட்சிகள் காண்பிக்கப்பட்டன. அவராலும் அந்தக் காட்சிகளில் இருந்த பெண்ணையோ அல்லது குற்றஞ்சாட்டப்பட்டவரையோ அடையாளம் காண முடியவில்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

அதனைத் தொடா்ந்து, செப்.15-ஆம் தேதி அந்தப் பெண்ணுக்காக வாதாடுவதாகக் கூறி ஒரு வழக்குரைஞரிடமிருந்து புகாா் பெறப்பட்டது. காவல் துறை மீண்டும் புகாா்தாரரைத் தொடா்பு கொண்டதைத் தொடா்ந்து, அவா் தனது காயங்களிலிருந்து குணமடைந்த பிறகு தில்லிக்கு வந்து விசாரணையில் இணைவதாகக் கூறினாா்.

அதனைத் தொடா்ந்து, சட்டத்தின் உரிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments