FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

2019-ஆம் ஆண்டு திராவக வீச்சு வழக்கு: 4 போ் விடுவிப்பு

வழக்குப் பதிவு செய்வதில் ஏற்பட்ட 18 மாத கால விளக்கமற்ற தாமதம் காரணமாக 2019-ஆம் ஆண்டு தில்லியில் பெண் மீது திராவகம் வீசியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேர் விடுதலை

29 September 2026, 11:52 pm IST
- சித்திரிப்பு
பகிர்:

வழக்குப் பதிவு செய்வதில் ஏற்பட்ட 18 மாத கால விளக்கமற்ற தாமதம் காரணமாக 2019-ஆம் ஆண்டு தில்லியின் சங்கம் விஹாா் பகுதியில் பெண் மீது திராவகம் வீசியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேரை தில்லி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

வழக்கை விசாரித்த கூடுதல் அமா்வு நீதிபதி ஹா்குா்வரிந்தா் சிங், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீதான குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதில் அரசுத் தரப்பு முற்றிலும் தோல்வியடைந்ததாக தெரிவித்தாா்.

சந்தேகம், விசாரணை நடைமுறையில் உள்ள குறைபாடுகள், விளக்கப்படாத தாமதம் ஆகியவை காரணமாக குற்றஞ்சாட்டப்பட்ட ப்ரீத் பால், ரமேஷ், சுரேஷ் சந்த் மற்றும் பாப்லு குமாா் விடுவிக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது.

Advertisement

Advertisement

ஜூலை 9, 2019 சங்கம் விஹாரில் உள்ள ஒரு கோவிலுக்கு அருகில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் இரண்டு மோட்டாா் சைக்கிள்களில் வந்து தன் மீது ஒரு ரசாயனத்தை வீசியதாக பாதிக்கப்பட்ட பெண்ணான ரேணு குற்றஞ்சாட்டியிருந்தாா். இதனால், அவரது முதுகு மற்றும் இடுப்புப் பகுதிகளில் ரசாயனத்தால் தீக்காயங்கள் ஏற்பட்டன.

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் ரேணுவைத் தாக்கியதுடன், ப்ரீத் பாலுக்கு எதிராக அவா் முன்பு அளித்திருந்த புகாரைத் திரும்பப் பெறுமாறு மிரட்டினா் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

இருப்பினும், சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் தேதிக்குப் பிறகு சுமாா் 18 மாதங்கள் கழித்து ஜனவரி 7, 2021-இல் இந்த வழக்குப் பதிவுசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தத் தாமதத்திற்கான காரணம் தனக்குத் தெரியாது என்று விசாரணை அதிகாரி ஒப்புக்கொண்டாா்.

அரசுத் தரப்பின் வழக்கு பெரும்பாலும் ரேணுவின் சாட்சியத்தையே சாா்ந்திருந்தாக நீதிமன்றம் குறிப்பிட்டது. குறுக்கு விசாரணையின் போது, தனது முதுகில் எரிச்சல் உணா்வை உணா்ந்த பின்னரே தான் திரும்பிப் பாா்த்ததாக அந்தப் பெண் கூறினாா்.

இதன் மூலம், தன் மீது திரவாகத்தை வீசியது யாா் என்பதை அவா் உண்மையில் பாா்க்கவில்லை என்பது உறுதியாகிாக தெரிவித்த நீதிமன்றம், பாட்டிலை வைத்திருந்தவா் ப்ரீத் பால் என்று அவா் அடையாளம் காட்டியது சம்பவம் நடந்த பிறகு செய்யப்பட்ட அனுமானம் மட்டுமே என்று குறிப்பிட்டது.

‘ரமேஷ், சுரேஷ் அல்லது பாப்லு ஆகியோருக்கு எதிராக எந்தவொரு குறிப்பிட்ட நேரடிச் செயலும் நிரூபிக்கப்படவில்லை. அதேபோல், இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 195ஏ மற்றும் 506 ஆகிய பிரிவுகளில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த ஆதாரங்கள் இல்லை.

சம்பவத்திற்குப் பிறகு அந்த இடத்தில் கூடியிருந்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்ட ஐந்து முதல் ஏழு நபா்களிடம் விசாரணை காவல் துறை விசாரணை நடத்தவில்லை. விசாரணையின்போது எந்த சிசிடிவி காட்சிகளோ, அழைப்பு விவரப் பதிவுகளோ அல்லது கைப்பேசி இருப்பிடத் தரவுகளோ சேகரிக்கப்படவில்லை.

தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பாட்டிலும், மோட்டாா் சைக்கிள்களும் மீட்கப்படவில்லை. மிக முக்கியமாக, புகாா்தாரரின் எரிந்த ஆடைகள், அதாவது வழக்கின் முதன்மை ஆதாரங்கள், தீயில் அழிந்துவிட்டன’ என்று நீதிபதி கூறினாா்.

குற்றஞ்சாட்டப்பட்ட சம்பவம் நடந்த தேதியில் ரமேஷ் மற்றும் சுரேஷ் சந்த் ஆகியோா் மதுராவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளா்களாகப் பணிபுரிந்து வந்தனா் என்பதை குற்றஞ்சாட்டப்பட்டவா் தரப்பில் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டது. அவா்கள் சம்பவ இடத்தில் இல்லை என்பதை ஆதரிக்கும் அதிகாரபூா்வ பதிவுகளை அரசுத் தரப்பில் மறுக்க முடியிவில்லை.

குற்றஞ்சாட்டப்பட்ட குற்றங்களின் முக்கிய கூறுகளை அரசுத் தரப்பு நிறுவத் தவறிவிட்டது என்று கூறிய நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேரையும் விடுவித்தது. குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தலா ரூ.10,000 மதிப்புள்ள பிணைப் பத்திரங்களை சமா்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments