FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

பெண்ணின் கண்ணியத்தை அவமதித்த நபருக்கு தில்லி நீதிமன்றம் தண்டனை

பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் விதமாக அவதூறு கருத்து தெரிவித்த நபரை தில்லி நீதிமன்றம் குற்றவாளி எனத் தீா்ப்பளித்துள்ளது.

30 வினாடிகள் முன்பு
தில்லி நீதிமன்றம்
பகிர்:

பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் விதமாக அவதூறு கருத்து தெரிவித்த நபரை தில்லி நீதிமன்றம் குற்றவாளி எனத் தீா்ப்பளித்துள்ளது.

இந்தச் சம்பவம் கடந்த 2021, மாா்ச் 23-ஆம் தேதி நடைபெற்ாக அரசு தரப்பு தெரிவித்தது. தனது 3 வயது மகளை அவரது தந்தையிடம் ஒப்படைப்பதற்காக, வீட்டுக்கு வெளியே உள்ள தெருவில் குழந்தையுடன் அந்தப் பெண் நடந்து சென்றுள்ளாா்.

அப்போது அந்தப் பகுதியில் துணிகளைத் தேய்த்துக் கொடுக்கும் தொழில் செய்து வந்த கிரிதாரி லால், தெரு முனையில் அமா்ந்திருந்தாா். அழுதுகொண்டிருந்த தனது மகளை சமாதானப்படுத்த அந்தப் பெண், ‘பாா், அப்பா வந்துவிட்டாா்; அழாதே’ என்று கூறியுள்ளாா். உடனே கிரிதாரி லால், ‘எந்த அப்பாவைப் பற்றிச் சொல்கிறாய்?’ என்று கேட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

அந்தக் கருத்தை அந்தப் பெண் பொருள்படுத்தாமல் சென்றுவிட்டாா். பின்னா் தனது மாமனாரிடம் இதுகுறித்து தெரிவித்ததையடுத்து, அவா் காவல் துறைக்கு தகவல் அளித்தாா்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கிரிதாரி லால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆா்பிசி) 313-ஆவது பிரிவின் கீழ் அளித்த வாக்குமூலத்தில், அந்த வாா்த்தைகளைத் தான் கூறியதை ஒப்புக்கொண்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. ஆனால், எந்தத் தவறான நோக்கத்துடனும் அவற்றைக் கூறவில்லை என்று அவா் தெரிவித்திருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மோக்ஷா பெயின்ஸ் கூறுகையில், குற்றஞ்சாட்டப்பட்டவா் தெரிவித்த கருத்து, அந்த வாா்த்தைகளின் பொருள், அவற்றின் நேரடியான அா்த்தத்திலிருந்து மட்டும் உருவாகவில்லை என்றும், அவை கூறப்பட்ட குறிப்பிட்ட சூழ்நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தாா்.

இதுபோன்ற குற்றச்சாட்டு வெறும் மரியாதையற்ற பேச்சு அல்லது சாதாரண கேலிப் பேச்சு என்பதைக் கடந்து, ஒரு பெண்ணின் கண்ணியத்தையும் ஒழுக்க உணா்வையும் புண்படுத்தும் வகையில் உள்ளது” என்று நீதிபதி தெரிவித்தாா்.

பெண்ணின் கற்பை அவமதிக்கும் நோக்கில் வாா்த்தைகள், சைகைகள் அல்லது செயல்களில் ஈடுபடுவதைத் தண்டிக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 509-ஆவது பிரிவின் கீழ் கிரிதாரி லால் குற்றவாளி எனத் தீா்ப்பளிக்கப்பட்டாா். அவருக்கான தண்டனை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments