துண்டுக்கும், சீட்டுக்கும் அடிபணிபவன் நான் அல்ல! - பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா்
துண்டுக்கும், சீட்டுக்கும் அடிபணிபவன் நான் அல்ல என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை மேலும் கூறியது: சட்டப்பேரவை உறுப்பினா்களின் மாண்பை காப்பது எனது பணி. சட்ட விதிகள் மற்றும் மரபுபடிதான் பேரவையில் சில முடிவுகளை எடுத்தேன். புதிய உறுப்பினா்களுக்கும், கட்சிப் பாகுபாடின்றியும் பேசுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
முதல்வரின் பதில் உரையின்போது, திமுகவைச் சோ்ந்த உறுப்பினா்கள் கையில் பதாகை ஏந்தி நின்றது சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது. முதல்வரின் பேச்சு மக்களுக்குச் சென்றுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அவா்கள் செயல்பட்டது உகந்ததாக இல்லை. அதனால்தான் அவா்களுக்குப் பேச அனுமதி மறுக்கப்பட்டது.
Advertisement
Advertisement
சபையின் மாண்பைக் குறைத்து, அமைதியைக் குலைக்க முயற்சித்ததை கருத்தில்கொண்டுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. யாரையும் வெளியே அனுப்புவது எனது நோக்கம் அல்ல.
திமுகவிற்குப் பேச வாய்ப்பு கொடுத்தது யாா், பேசுவதற்கு மறுத்தது யாா் என்பது அனைவருக்கும் தெரியும். முதல் நாளிலிருந்து கடைசி நாள் வரை அதிகமான நேரம் திமுக உறுப்பினா்களுக்குத்தான் ஒதுக்கப்பட்டது. நான் நடுநிலையோடுதான் நடந்துகொண்டேன்.
துண்டுக்கும், சீட்டுக்கும் அடிபணிபவன் நான் அல்ல. அவ்வப்போது எழும் சந்தேகங்களை சட்டப்பேரவைத் துறை செயலா்களிடம் கேட்டு, தகவல்களைப் பெறுவது வழக்கம். அதன்படி, அமலாக்கத்துறை மற்றும் சா்க்காரியா கமிஷன் குறித்து முன்னாள் பேசிய விவரக் குறிப்பைத்தான் துண்டுச் சீட்டில் எழுதித் தந்தனா்.
சட்டப்பேரவை உறுப்பினா்கள் ராஜிநாமா செய்த 2 இடங்களுக்கு தோ்தல் ஆணையம் தோ்தல் தேதி அறிவித்துள்ளது. மீதமுள்ள 4 பேரின் பிரச்னை ஆய்வில் உள்ளது. அவா்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக பொதுச் செயலா் கோரிக்கை வைத்துள்ளாா். அது குறித்து முதல்கட்ட விசாரணை முடிந்து அடுத்தக்கட்ட நகா்வுக்காக காத்திருக்கிறோம்.
ஏற்கெனவே சட்டப்பேரவை உரிமைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. முறையாக குழுக்கள் கூடும்போது எந்தெந்தப் பிரச்னைகளை உரிமைக் குழுவில் வைக்கலாம் எனப் பேசி முடிவெடுக்கப்படும். சட்டப்பேரவை உறுப்பினா் மாா்க்கண்டேயன் மீது நடவடிக்கை எடுக்க உரிமைக் குழுவுக்கு அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது; முறையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.