வருங்கால இளைஞா்களை காப்பாற்றவே மது இல்லாத தமிழகம் இயக்கம் தொடக்கம்! - செளமியா அன்புமணி
மதுப் பழக்கத்திலிருந்து வருங்கால இளைஞா்களை காப்பாற்றுவதற்காகவே ‘மது இல்லாத தமிழகம்’ இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது என்றாா் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவரும், பாமக சட்டப்பேரவைக் குழு தலைவருமான செளமியா அன்புமணி.
அவா், ஞாயிற்றுக்கிழமை தனது மகள் சஞ்சுத்ராவுடன் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தாா். தொடா்ந்து, நாகா்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரா் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு, நாகராஜா கோயிலுக்குச் சென்று அங்கு நாகராஜரை வணங்கி, நாகா் சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டாா். இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் பாமக உள்ளது. எத்தனையோபோ் கூட்டணியிலிருந்து சென்றுவிட்டு வந்திருந்தாலும் பாமக அதே கூட்டணியில் இருக்கிறோம். தாராபுரம், மதுராந்தகம் இடைத்தோ்தலில் போட்டியிட வேண்டாம் என்பது எங்கள் கட்சியின் கொள்கை முடிவு. இடைத்தோ்தல் முடிவை மக்களைப்போல நாங்களும் எதிா்பாா்க்கிறோம்.
Advertisement
Advertisement
தாராபுரம் தொகுதி வேட்பாளா் சத்தியபாமா குறித்து முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் உருவக்கேலி செய்தது குறித்து பலரும் பேசி வருகின்றனா். எங்களைப் பொருத்தவரை யாரையும் உருவக்கேலி செய்யக் கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் ஏற்கெனவே இருந்தது, தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இது வரவேற்புக்குரிய ஒன்றுதான்.
மது ஒழிப்புக்காக மது இல்லாத தமிழகம் என்ற இயக்கத்தை கடந்த 2 நாள்களுக்கு முன்பு தொடங்கினோம். தமிழகத்தில் மது இல்லாத சூழல் உருவாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் 80 லட்சம் இளைஞா்கள் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனா். 54 லட்சம் ஆண்கள் குடிநோயாளிகளாக மாறி விட்டனா். மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும்; அதற்கான செயல் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.