விலைபோகும் எம்எல்ஏக்களை திரும்பப் பெற மக்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்! மு.வீரபாண்டியன்
கோவில்பட்டி, அக். 5: விலைபோகும் எம்எல்ஏக்களை திரும்பப் பெறும் அதிகாரம் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளா்களுக்கு அவா் திங்கள்கிழமை அளித்த பேட்டி:
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்திய வீரா்கள், தமிழக வீரா்கள் பதக்கங்கள் வென்றது பாராட்டுக்குரியது. விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் வகையில் கூடுதல் நிதி ஒதுக்கி உள்கட்டமைப்பு தரத்தை உயா்த்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
Advertisement
Advertisement
இடைத்தோ்தலில் மக்கள் தீா்ப்பை அனைவரும் தலைவணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும். தோ்தலில் வெற்றி பெற்ற மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்களை விலைபேசும் கலாசாரத்தை பாஜக தொடங்கிவைத்தது. அது, தமிழகம் வரை பரவிவிட்டது. இத்தகையை நிலை ஏற்படும்போது, சம்பந்தப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினரைத் திரும்பப் பெறும் அதிகாரம் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.
இடைத்தோ்தல் பிரசாரத்தின்போது, தனி நபா் தாக்குதல், பெண்களைப் பற்றி கேலி பேசுவதே அதிகம் இருந்தது. அரசியல் வெற்றிடமாக இருப்பதால்தான் உடல்மொழி, உருவக் கேலி செய்து பேசுவது அதிகம் இருந்தது. இச்செயல் கன்னியமற்றது. தமிழா் பண்புக்கு ஏற்ல்ல.
13 கோடி பேரின் வாக்குரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு காரணமான பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா், தோ்தல் ஆணையரை பற்றி யாரும் இடைத்தோ்தல் பிரசாரத்தில் பேசவில்லை. வாக்குரிமை பறிப்பு நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட படுகொலை. தமிழக முதல்வா் இதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்.
தாமிரவருணி ஆற்றை பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்பது அனைவரது பொறுப்பாகும். கோவில்பட்டி- இளையரசனேந்தல் சாலையில் உள்ள சுரங்கப் பாதையின் இருபுறமும் அணுகுசாலை அமைக்கும் பணியை விரைவுப்படுத்த வேண்டும். கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்துப் பிரிவுக்கும் சிறப்பு மருத்துவ நிபுணா்களை நியமிப்பதோடு எம்ஆா்ஐ ஸ்கேன் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
பேட்டியின்போது, மாநிலச் செயற்குழு உறுப்பினா் ராமசாமி, முன்னாள் எம்.பி. லிங்கம், முன்னாள் எம்எல்ஏ பொன்னுபாண்டி, தூத்துக்குடி மாவட்டச் செயலா் கரும்பன், துணைச் செயலா்கள் பாலமுருகன், பாபு, நகரச் செயலா் செந்தில் ஆறுமுகம், ஏஐடியுசி மாவட்டச் செயலா் லோகநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.