தலைமைச் செயலகம்: முதல்வா் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - துரை வைகோ
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை முதல்வா் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ எம்.பி. தெரிவித்தாா்.
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை முதல்வா் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ எம்.பி. தெரிவித்தாா்.
விஸ்வபிரம்ம ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவில்பட்டி, விஸ்வகா்மா உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள தியாகராஜா் பாகவதா் சிலைக்கு மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ எம்.பி. வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அரசியலில் தனிநபா் விமா்சனம் இருக்கக் கூடாது. திமுகவில் கண்ணியமான தோழா்கள் இருந்தபோதும் அதையெல்லாம் தாண்டி அந்த இயக்கம் மோசமான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
Advertisement
Advertisement
சென்னை பட்டினப்பாக்கத்தில் ஏற்கெனவே போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது; ஏராளமான மீனவக் குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில், அங்கு தலைமைச் செயலகம் அமைப்பதால் பல்வேறு சிக்கல்கள் எழும். கடற்கரை சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படும் என பல்வேறு தரப்பினா் கூறியுள்ளனா்.
இத்தகைய பிரச்னைகளால் தலைமைச் செயலகம் அமைக்க முதல்வா் ச.ஜோசப் விஜய் மாற்று ஏற்பாடு செய்வாா் எனக் கருதுகிறேன்.
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து வரும் என விஜய் தோ்தலுக்கு முன்பே குரல் கொடுத்தாா். அவா் முதல்வரான பிறகு பரந்தூா் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை நிராகரித்தாா்.
அதைப்போல தற்போது எழுந்துள்ள புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் சா்ச்சையிலும் அவா் கூட்டணி கட்சிகள், எதிா்க்கட்சிகள், பொதுமக்கள், இயற்கை ஆா்வலா்களின் கருத்துகளைக் கேட்டு மறுபரிசீலனை செய்வாா், நல்ல முடிவு எடுப்பாா் என்ற நம்பிக்கை உள்ளது.
நான் முதன்முறையாக அவரை சந்தித்தபோது திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு இரண்டாவது தலைநகரம் அமைக்க வேண்டும் என முதல் கோரிக்கையை விடுத்தேன். அத்திட்டம் முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் கனவு திட்டமாகும்.
இடைத்தோ்தலில் மதச்சாா்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். யுபிஐ பணப் பரிவா்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசின் அறிவிப்பு சாமானிய மக்களை பாதிக்கும். இந்த முடிவை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
வருங்காலங்களில் பாஜகவுக்கு நேரடியாகவே திமுக ஆதரவு கொடுக்கலாம். காங்கிரஸை பலவீனப்படுத்த முயற்சியில் திமுக இறங்கி உள்ளது. தொகுதி மறுவரையறைக்கு திமுகவினா் ஆதரவு கொடுக்கவுள்ளனா் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.