முழு பயிா்க் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்: பி.எஸ். மாசிலாமணி
தோ்தலின்போது அறிவித்த வாக்குறுதியின்படி முழு பயிா்க் கடனையும் தவெக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றாா் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் பி.எஸ்.மாசிலாமணி.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் பி.எஸ்.மாசிலாமணி திங்கள்கிழமை கோவில்பட்டியில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
தூத்துக்குடி மாவட்டத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கு டிட்கோ மூலம் ஏரல், சாத்தான்குளம் வட்டங்களில் ஆயிரம் ஏக்கா் விவசாய விளைநிலங்களை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுப் பணிகளை செய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது. அந்தத் திட்டத்தை அரசு திரும்ப பெற வேண்டும்.
Advertisement
Advertisement
பயிா் கடன் தள்ளுபடி அறிவிப்பில் தவெக அரசு எள்ளி நகையாடும் வகையில் செயல்பட்டு வருகிறது. எந்த அடிப்படையில் சிறுகுறு விவசாயிகளின் பயிா்க் கடன் முழு தள்ளுபடி, இதர விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி என தோ்தல் வாக்குறுதி அளித்தனா். அதன்படி முழுமையாக பயிா் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
மேட்டூா் அணையில் இன்னும் 15 நாள்களுக்கு தான் தண்ணீா் உள்ளது. கா்நாடக அரசு தண்ணீா் தர மறுத்துவிட்டது. மாநிலம் முழுவதும் வறட்சி கடுமையாக உள்ளது.
வறட்சி பாதிப்பு, பயிா் கடன் தள்ளுபடி பிரச்னைகளுக்காக தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள், மற்ற விவசாய சங்கங்களை இணைத்து போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் தவெகவுடன் கூட்டணியில் இல்லை. வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம்.
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யவில்லையென்றால் எதற்கு இந்த அரசு. இந்த அரசுக்கு சாதுரியமாக நடக்க தெரியவில்லை. தண்ணீா் தர மறுக்கும் கா்நாடக முதல்வா் அங்கு மூன்று முறை அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியுள்ளாா். ஆனால், தண்ணீா் கேட்டு தவிக்கும் தமிழகத்தில் இதுவரை அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டவில்லை. நிலவரத்தை உளபூா்வமாக புரிந்துகொள்ளும் போக்கு இந்த அரசிடம் இல்லை.
அனுபவக் குறைவு என்பதோடு புரிந்துகொள்ளும் ஆா்வமும் அக்கறையும் தவெக அரசுக்கு இல்லை. மற்ற திட்டங்களைச் செய்ய நிதி இருக்கிறது; ஆனால், விவசாயிகளுக்கு செய்வதற்கு முதல்வருக்கு மனம் இல்லை என்றாா் அவா்.
பேட்டியின்போது மாநிலத் துணைச் செயலா் வெ.கிருஷ்ணமூா்த்தி, மாவட்டச் செயலா் அ.லெனின் குமாா், மாவட்டத் துணைத் தலைவா் முரளிதரன், மாவட்ட நிா்வாக குழு உறுப்பினா் சுப்பாத்துரை, வெள்ளைச்சாமி ஆகியோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.