காவிரியின் குறுக்கே ஆமைவேகத்தில் கட்டப்படும் கதவணை! விவசாயிகள் வேதனை: விரைந்து முடிக்க வலியுறுத்தல்
நஞ்சைப்புகழூரில் காவிரி ஆற்றின் குறுக்கே 5 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் கட்டப்பட்டு வரும் கதவணைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.
கரூா் மாவட்டம், நஞ்சைப்புகழூரில் காவிரி ஆற்றின் குறுக்கே 5 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் கட்டப்பட்டு வரும் கதவணைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.
பருவமழை காலங்களில் காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரை தடுத்து நிறுத்தி சேமிக்கும் வகையில், கரூா் மாவட்டம் மாயனூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் கதவணைப் போல, புகழூரிலும் கட்ட வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதையேற்று, கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியால் 2020-ஆம் ஆண்டு கரூா் மாவட்டம் நஞ்சைபுகழூருக்கும், நாமக்கல் மாவட்டம் அனிச்சம்பாளையத்துக்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே ரூ. 406.50 கோடி மதிப்பீட்டில் கதவணை கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு, நிதியும் உடனடியாக விடுவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
2021-இல் பணிகள் தொடக்கம்: இதைத்தொடா்ந்து, 2020, நவம்பரில் பூமிபூஜை நடைபெற்று, கட்டுமானப் பணிகள் 2021, பிப். 22-ஆம் தேதி தொடங்கியது. மழைக் காலங்களில் காவிரி உபரிநீரை 0.80 டிஎம்சி அளவுக்கு சேமிக்கும் வகையிலும், அதிகளவிலான நீா்வரத்தின்போது அணையிலிருந்து விநாடிக்கு 3,60,000 கன அடிநீரை வெளியேற்றும் வகையிலான ஏற்பாடுகள், ஆற்றின் குறுக்கே 1,056 மீட்டா் நீளத்திலும், 73 மதகுகளுடன் கூடியதாகவும் கதவணை கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்றன.
4 ஆயிரம் ஏக்கா் பாசன வசதி: இத்திட்டம் பயன்பாட்டுக்கு வரும்போது, கரூா் மாவட்டத்தில் 1,458 ஏக்கா் நிலங்களும், நாமக்கல் மாவட்டத்தில் 2,583 ஏக்கா் நிலங்களும் பாசன வசதி பெறுவதுடன், கரூா் மாவட்டத்தில் 6, நாமக்கல் மாவட்டத்தில் 9 குடிநீா் வழங்கும் திட்டங்களுக்கும் ஏதுவாக இருக்கும்.
ஆனால், பணிகள் அனைத்தும் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. காவிரியில் தண்ணீரை திறந்துவிட கா்நாடகம் தொடா்ந்து மறுத்து வரும் நிலையில், இந்த கதவணை கட்டப்பட்டால் காவிரி உபரிநீரை 0.80 டி.எம்.சி. அளவில் சேமிக்க முடியும் என்பதால், விரைந்து அணையை கட்டி முடிக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.
80 சதவீத பணிகளே நிறைவு: இதுதொடா்பாக புகழூா் வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்க செயலா் ராமசாமி கூறியதாவது:
கதவணை கட்டுவதற்கு 36 மாதங்கள் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டே கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2021-இல் தொடங்கிய அணை கட்டுமானப் பணி தற்போதுவரை 80 சதவீதமே முடிந்துள்ளது.
அணையில் அமைக்கப்பட்டிருக்கும் ஷட்டா்களில் ஹைட்ராலிக் சிஸ்டம் பொருத்தும் பணிகளும் 45 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளன. மேலும், கதவணைக்கு வரும் நீரின் அளவை கணக்கிடும் அறை, பொறியாளா்கள் தங்கும் அறை போன்றவற்றின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை.
காலக்கெடுவை தாண்டி, தற்போது கூடுதலாக 2 ஆண்டுகள் ஆன நிலையிலும் பணிகள் ஆமை வேகத்தில்தான் நடைபெறுகின்றன. உரிய நேரத்துக்குள்ளாக கதவணை கட்டப்பட்டிருந்தால், காவிரி உபரி நீரை இருமுறை சேமித்திருக்க முடியும். தற்போது திட்டத்தை முடிக்க கூடுதல் நிதி தேவைப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனா்.
பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு இல்லை: கூடுதல் நிதி குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என எதிா்பாா்த்திருந்தோம். ஆனால், அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இதனால், இந்த அணையின் கட்டுமான பணிகள் இன்னும் பல ஆண்டுகள் நீடிக்குமோ என்ற அச்சம் விவசாயிகளிடையே எழுந்துள்ளது.
தமிழகத்தில் காவிரி ஆறு பாயும் மாவட்டங்களில் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் மிகப்பெரிய கதவணைத் திட்டம் இது என்பதால், இந்தப் பிரச்னையில் முதல்வா் ஜோசப் விஜய் உடனே தலையிட்டு இதற்கான நிதியை உடனே விடுவித்து, கரூா், நாமக்கல் மாவட்டங்களின் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வில் ஒளியேற்றிட வேண்டும் என்றாா் அவா்.
தாமதம் ஏன்?
கதவணை கட்டுமானப் பணியின் தாமதம் குறித்து குளித்தலை காவிரி ஆற்றுப் பாதுகாப்பு உபகோட்ட உதவி பொறியாளா் ஒருவா் கூறியதாவது:
கதவணை கட்டுமானத்தில் தற்போது 80 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. தற்போது தானியங்கி ஷட்டா்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், அணையில் மின்சார இணைப்பு, கான்கிரீட் தளம் அமைப்பு போன்ற முக்கிய பணிகளை நிறைவேற்ற போதிய நிதியின்மையால் அரசின் (நஅந ஊமசஈ- நற்ஹய்க்ஹழ்க்ண்ள்ங்க் அஞ்ங்ய்ஸ்ரீஹ் ஊன்ய்க்) பொது நிதியில் ரூ.140 கோடி ஒதுக்கீடு செய்ய கோரி நீா்வளத் துறையில் அறிக்கை கொடுத்துள்ளோம். அந்த நிதி வந்தபின் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விடும். வரும் 2027-இல் அணையில் தண்ணீரை சேமிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.