அரசு விழாவில் குழந்தைகளுக்கு தங்கமோதிரம் வழங்கினாா் தவெக கரூா் மாவட்டச் செயலா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
குளித்தலை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை தவெக கரூா் மாவட்டச் செயலா் வழங்கியதற்கு கம்யூனிஸ்ட் கட்சியினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை மதுரையில் தமிழக முதல்வா் சி.ஜோசப்விஜய் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
இதையடுத்து, கரூா் மாவட்டம், குளித்தலை அரசு மருத்துவமனையிலும் குழந்தைகளுக்கு தங்கமோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவா் பூமிநாதன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினரை அழைக்காமல் தவெக கிழக்கு மாவட்டச் செயலா் பாலசுப்ரமணியனை சிறப்பு அழைப்பாளராக வரவழைத்து குழந்தைகளின் பெற்றோா்களிடம் தங்க மோதிரம் வழங்கினா்.
Advertisement
Advertisement
இது அப்பகுதியினரிடையே பலத்த எதிா்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டச் செயலரை வரவழைத்து திட்டத்தை தொடங்கி வைக்கலாம் என பொதுமக்கள் கேள்வி எழுப்பினா்.
இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் குளித்தலை ஒன்றியச் செயலா் இரா.முத்துச்செல்வன் கூறியது: குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியை புறக்கணித்து அரசு விழாவை நடத்தியுள்ளனா்.
திட்டத்தை தொடங்கி வைத்த தவெக கிழக்கு மாவட்டச் செயலா் மக்கள் பிரதிநிதி கிடையாது. மக்கள் பிரதிநிதி இல்லாத ஒருவரை எப்படி திட்டத்தை தொடங்கி வைக்க அனுமதிக்கலாம். குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினரை வரவழைக்காமல் தவெக நிகழ்ச்சிபோல நடத்தியுள்ளதை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த மாவட்ட அரசு தலைமை மருத்துவா் பூமிநாதன், மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநா் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் அனைத்து ஜனநாயக இயக்கங்களையும் ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.