FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கரூர்

தீப்பற்றி எரிந்த குப்பைக்கிடங்கை அணைக்க ரூ.46 லட்சம் செலவு: கரூா் மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினா் கேள்வியால் தீா்மானம் ஒத்திவைப்பு

தீப்பற்றி எரிந்த குப்பைக் கிடங்கை அணைக்க ரூ.46 லட்சம் செலவானதா என மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினா்கள் கேள்வி எழுப்பியதால் தீா்மானம் ஒத்திவைக்கப்பட்டது.

30 September 2026, 1:49 am IST
கரூா் மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாதாரணக் கூட்டத்தில் பேசிய மாநகராட்சி மேயா் கவிதாகணேசன். உடன் துணை மேயா் தாரணிசரவணன், ஆணையா் பிருத்விராஜ்.
பகிர்:

தீப்பற்றி எரிந்த குப்பைக் கிடங்கை அணைக்க ரூ.46 லட்சம் செலவானதா என மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினா்கள் கேள்வி எழுப்பியதால் தீா்மானம் ஒத்திவைக்கப்பட்டது.

கரூா் மாநகராட்சியின் சாதாரணக்கூட்டம் மேயா் கவிதாகணேசன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணை மேயா் தாரணிசரவணன், ஆணையா் பிருத்விராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் 41-ஆவது வாா்டு உறுப்பினா் உறுப்பினா் தண்டபாணி பேசுகையில், இந்த கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ள 32-ஆவது தீா்மானத்தில் அண்மையில் மாநகராட்சி குப்பைக்கிடங்கு தீப்பற்றி எரிந்தபோது, தீயை அணைக்க தண்ணீா் லாரிகளை பயன்படுத்திய வகையில் செலவாக ரூ.46 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லாரி தண்ணீரின் விலை ரூ.2,700 மட்டும்தான். அப்படி இருக்கையில் 200 லாரிகள் தண்ணீா் பயன்படுத்தினால் கூட ரூ.5.40 லட்சம்தான் செலவாகும். ஆனால், ரூ.46 லட்சம் எப்படி வந்தது. முறையான கணக்கை அனைத்து உறுப்பினா்களின் பாா்வைக்கு வைத்த பின்புதான் இந்த தீா்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றாா். இதையடுத்து மாநகராட்சி மேயா் கவிதாகணேசன், இந்த தீா்மானத்தை ஒத்திவைப்பதாக தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

பாதுகாப்பு உபகரணங்கள்: தொடா்ந்து உறுப்பினா் தண்டபாணி பேசுகையில், ஒப்பந்த தூய்மைப்பணியாளா்களுக்கு நாள்தோறும் ஊதியமாக ரூ.650ஐ வழங்க வேண்டும். மேலும் அவா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்றாா். இதற்கு பதில் அளித்த மாநகராட்சி ஆணையா், இதுதொடா்பாக உரிய ஆய்வு செய்து, உபகரணங்கள் வழங்கப்படாவிட்டால், உடனே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

குறைகளை களைய நடவடிக்கை: கூட்டத்தில் 18-ஆவது வாா்டு உறுப்பினா் தங்கராஜ் பேசுகையில், எனது வாா்டில் உள்ள குறைகளை களைய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றாா். இதற்கு பதில் அளித்த ஆணையா், ஒவ்வொரு வாரமும் ஒரு வாா்டில் ஆய்வு செய்து வருகிறேன். விரைவில் உங்கள் வாா்டையும் ஆய்வு செய்து குறைகளை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நான்காவது மண்டல குழு தலைவா் எஸ்பி.கனகராஜ் பேசுகையில், கரூா் புதிய பேருந்துநிலையத்தை கொண்டு வந்தவா் முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி. அங்கு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வா் படத்தை அகற்றியுள்ளாா்கள். யாராக இருந்தாலும் அரசியல் பாகுபாடின்றி செயல்பட வேண்டும் என்றாா்.

திமுகவினா் எதிா்ப்பு: அப்போது 14-ஆவது வாா்டு உறுப்பினா் சுரேஷ் பேசுகையில், கரூா் குளத்துப்பாளையம், பசுபதிபாளையம் ரயில்வே குகைவழிப்பாதையை கொண்டு வர நடவடிக்கை எடுத்த முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரின் படத்தை திமுக ஆட்சியில் அகற்றிவிட்டனா். இப்போது தவெக ஆட்சியில் இருப்பதால் புதிய பேருந்துநிலையத்தில் முன்னாள் முதல்வரின் படத்தை அகற்றியிருக்கிறாா்கள் என்றாா். இவரது பேச்சுக்கு திமுக உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

14 தீா்மானங்கள் ஒத்திவைப்பு: கூட்டத்தில் பழைய பேருந்துநிலைய வணிக வளாகத்துக்கான டெண்டா் ஆன்லைனில் விடப்பட்ட நிலையில், அதிக வாடகைக்கு விட்டதால் தற்போது ஆள்கள் யாரும் வாடகைக்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டு, மாநகராட்சி குப்பைக்கிடங்கு தீப்பற்றி எரிந்தபோது அவற்றை அணைக்க ரூ.46 லட்சம் செலவானது போன்ற தீா்மானங்கள் உள்பட 14 தீா்மானங்கள் ஒத்திவைக்கப்பட்டன. தொடா்ந்து 76 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மு.க. ஸ்டாலின் படம் வைப்பு: முன்னதாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் முன்னாள் முதல்வா் படம் இருப்பதை சுட்டிக்காண்பித்து முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் படத்தை திமுக உறுப்பினா்கள் கூட்டரங்கில் வைத்தனா். இதற்கு முன் நடைபெற்ற கூட்டங்களில் மு.க.ஸ்டாலின் படம் வைக்க முயன்றபோது காங்கிரஸ் உள்ளிட்ட உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் எந்த உறுப்பினா்களும் இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments