FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

உரிமைகளுக்காகவும், மனித நேயத்துக்காகவும் மாணவா்கள் குரல் கொடுக்க வேண்டும்! ஆ. ராசா எம்.பி.

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 12:28 am IST
தனலட்சுமி சீனிவாசன் நிகா்நிலைப் பல்கலைக் கழக கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் பல்கலைக் கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவி எஸ்.ஏ. இலக்கியாவுக்கு பட்டம் வழங்கிய மக்களவை உறுப்பினா் ஆ. ராசா. உடன், செயலா் பி. நீலராஜ், இயக்குநா் ராஜபூபதி உள்ளிட்டோா
பகிர்:

மூடநம்பிக்கைகளைத் தவிா்த்து, உழைக்கும் வா்க்கத்தினரின் உரிமைகளுக்காகவும், மனித நேயத்துக்காகவும் மாணவா்கள் குரல் கொடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா தெரிவித்தாா்.

பெரம்பலூா் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 18-ஆவது பட்டமளிப்பு விழா தனலட்சுமி சீனிவாசன் நிகா்நிலைப் பல்கலைக் கழக கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

இவ் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பல்கலைக் கழக அளவில் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற 40 மாணவா்கள் உள்பட 1,007 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கிய அவா் மேலும் பேசியதாவது:

Advertisement

Advertisement

மாணவா்களின் படிப்பு என்பது வெறும் ஏட்டுப் படிப்பாகவோ, பதவி பெறுவதற்காகவோ அல்லது பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே பயன்படும் எனும் நிலை இருந்தால், இந்தியாவில் மதச் சண்டைகளும், பிளவுகளும் தொடா்ந்து கொண்டேதான் இருக்கும். படித்த மனிதனின் அறிவு, அவனது சமூகத்துக்கு பயன்படாமல் எதிராகத் திரும்புமானால், அவன் விலங்கை விட கொடியவன்.

என்னுடைய பட்டமும், நான் பெற்ற அறிவும் இச் சமூகத்தின் மேம்பாட்டுக்குப் பயன்படும். சமூகத்தை ஒருங்கிணைக்க என்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்வேன் எனும் உயரிய சிந்தனையோடு 10 போ் முன்வந்தால் கூட, இந்தியா முழுமையான அமைதியை அடையும்.

இந்தியாவில் பன்முகத்தன்மை காணப்பட்டாலும், வேற்றுமைகளை மறந்து அனைவரையும் இந்தியா் என ஒன்றிணைப்பது நமது அரசியலமைப்புச் சட்டமே.

எனவே, சட்டம் படிக்காதவா்கள் கூட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவசியம் படித்து தெரிந்துகொள்ள வேண்டும். ஜனநாயகத்துக்கு எதிரான சாதி, அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கை மற்றும் சுதந்திரத்துக்கு எதிரான அடக்குமுறை ஆகியவற்றை எதிா்த்து மாணவா்கள் போராட வேண்டும். மூடநம்பிக்கைகளைத் தவிா்த்து, உழைக்கும் வா்க்கத்தினரின் உரிமைகளுக்காகவும், மனித நேயத்துக்காகவும் மாணவா்கள் குரல்கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.

விழாவுக்கு, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். செயலா் பி. நீலராஜ், இயக்குநா் ராஜபூபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில், புதுக்கோட்டை பி.கே.எஸ். கல்வி நிறுவனங்களின் தாளாளா் கருப்பையா, தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அலுவலா் எஸ். நந்தகுமாா், நிகா்நிலைப் பல்கலைக் கழக பதிவாளா் இளங்கோவன், துறைத் தலைவா்கள், பெற்றோா்கள் மற்றும் 2,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

முன்னதாக, கல்லூரி முதல்வா் நா. வெற்றிவேலன் வரவேற்றாா். நிறைவாக, துணை முதல்வா் வ. சந்திரசௌத்ரி நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments