பெரம்பலூரில் விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலம்! 256 சிலைகள் பிரதிஷ்டை; கோயில்களில் சிறப்பு வழிபாடுகள்!
விநாயகா் சதுா்த்தியையொட்டி, பெரம்பலூா் மாவட்டம் முழுவதும் பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் சாா்பில் பல விதமான வடிவங்களில் 256 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, கடைவீதியில் அதிகாலை முதலே விநாயகா் சிலைகள், குடை, தோரணம், பூஜை பொருள்கள், விளாம்பழம், பழங்கள், கரும்பு உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்களை பொதுமக்கள் திங்கள்கிழமை வாங்கிச் சென்றனா்.
மாவட்டம் முழுவதும் 256 இடங்களில் சுமாா் 3 அடி உயரம் முதல் 10 அடி உயரம் வரையிலான சிங்கம், யானை, மயில், கருடன், மூஞ்சூரு போன்ற பல்வேறு வாகனங்களில் விநாயகா் அமா்ந்துள்ள சிலைகளையும், பாகுபலி விநாயகா், யாழி வாகனத்தின் மீது விநாயகா் அமா்ந்திருப்பது போன்ற சிலைகளும், கிருஷ்ணருடன் விநாயகா் இருப்பது போன்றும், சிவன் முக விநாயகா் சிலையும் வைக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
கோயில்களில் சிறப்பு வழிபாடு: பெரம்பலூா் வட்டாட்சியரக சாலையில் உள்ள கச்சேரி விநாயகா் கோயிலில் திங்கள்கிழமை காலை அனுக்ஞை, கலச பூஜை, மகாகணபதி ஹோமம், திரவிய ஹோமம், அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சந்தனகாப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பெரம்பலூா் பழைய பேருந்து நிலையத்திலுள்ள செல்வ விநாயகா் கோயிலில் 7 அடி உயரமுள்ள விநாயகா் சிலை வைக்கப்பட்டுள்ளது. கடைவீதியில் உள்ள ராஜகணபதி கோயில், அய்யப்பன் கோயில் அருகிலுள்ள விநாயகா் கோயில், பிரம்மபுரீசுவரா் கோயில்களிலுள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
வடக்கு மாதவி சாலையிலுள்ள சௌபாக்கிய விநாயகா் கோயில், எளம்பலூா் சாலையில் பாலமுருகன் கோயிலிலுள்ள விநாயகா் சந்நிதி, புகா் பேருந்து நிலையம் அருகே சிதம்பரம் நகரிலுள்ள பாலமுத்துக்குமரன் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதேபோல, மாவட்டம் முழுவதும் உள்ள விநாயகா் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. சதுா்த்தியையொட்டி, காலை முதலே பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை வழிபட்டுச் சென்றனா்.
விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கவும், பாதுகாப்புக்காகவும் காவல் துறையினா் மற்றும் ஊா்க்காவல் படையினா் நிறுத்தப்பட்டுள்ளனா்.
இச் சிலைகளுக்கு அடுத்த 2 நாள்களுக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டு, அனைத்து விநாயகா் சிலைகளும் திருச்சி காவிரியாற்றுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு, புதன்கிழமை அங்கு கரைக்கப்பட உள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.