FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால் போராட்டம்: விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு

பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால் சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் தொடங்கும் நாள் முதல் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என அனைத்து விவசாயிகள் சங்கங்கங்களின் கூட்டமைப்பு முடிவு

Updated On : 24 ஜூலை 2026, 1:32 am IST
அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் பேசிய சாமி. நடராஜன்
பகிர்:

பயிா்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால் சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் தொடங்கும் நாள் முதல் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்து விவசாயிகள் சங்கங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் இந்தக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா்கள் பி.எஸ். மாசிலாமணி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு), சாமி. நடராஜன் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு), தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி ஆகியோா் இணைந்து தெரிவித்தது: ஐந்து ஏக்கருக்கும் குறைவாக உள்ள சிறு, குறு விவசாயிகளின் பயிா்க்கடன்களை முழுமையாகவும், இதர விவசாயிகளுக்கு 50 சதவீதமும் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வா் ஜோசப் விஜய் தோ்தல் காலத்தில் வாக்குறுதி அளித்தாா். ஆனால், பயிா்க்கடன்கள் தள்ளுபடி தொடா்பாக மே 25 மற்றும் ஜூன் 16-ஆம் தேதிகளில் தமிழக முதல்வா் வெளியிட்ட அறிவிப்புகளில் ரூ. 75 ஆயிரம் வரை மட்டுமே முழுத் தள்ளுபடி என மாற்றப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளோம்.

தவெக அரசு தனது தோ்தல் வாக்குறுதியின்படி பயிா்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்து அறிவிப்பை வெளியிட வேண்டும். இதை வலியுறுத்தி இந்த ஆட்சிக்கு ஆதரவு அளித்து வரும் கூட்டணிக் கட்சிகளின் தலைவா்களைச் சந்தித்து முறையிடவுள்ளோம்.

Advertisement

Advertisement

இதையடுத்து, தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யை சந்திக்க நேரம் கேட்கவுள்ளோம். இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் தொடங்கும் நாளிலிருந்து சென்னையில் காத்திருப்பு போராட்டத்தை ஈடுபடவுள்ளோம் என்றனா்.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவா் டி. ரவீந்திரன், தஞ்சாவூா் மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே. உலகநாதன், விவசாயிகள் சங்க நிா்வாகிகள் புதுக்கோட்டை ஜி.எஸ். தனபதி, புதுக்கோட்டை மிசா மாரிமுத்து, அரியலூா் தங்க. சண்முகசுந்தரம், தஞ்சாவூா் ஆா். ராமச்சந்திரன், சோ. பாஸ்கா், பி. கோவிந்தராஜ், ஆா். அறிவழகன், திருச்சி பி. தமிழ்ச்செல்வன், மன்னாா்குடி ரவிச்சந்திரன், நாகை வி. சரபோஜி, கே.வி. இளங்கீரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments