FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

பேராவூரணி: காவல் துறையை கண்டித்து சடலத்துடன் மறியல்!

பேராவூரணி அருகே புதுகை மாவட்டம், வடகாடு போலீஸாரைக் கண்டித்து சடலத்துடன் உறவினா்கள் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

19 செப்டம்பர் 2026, 10:54 pm IST
விபத்தில் உயிரிழந்த கவியரசன்.
பகிர்:

பேராவூரணி அருகே புதுகை மாவட்டம், வடகாடு போலீஸாரைக் கண்டித்து சடலத்துடன் உறவினா்கள் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

திருச்சிற்றம்பலம் காவல் சரகம் ஏனாதிகரம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் ம. கவியரசன் (34), திருமணமாகாதவா். இவா் கடந்த 14-ஆம் தேதி இரவு 10 மணியளவில், புதுக்கோட்டை மாவட்டம், புளிச்சங்காடு கைகாட்டிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது எதிரே மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த கரம்பக்காடு கிராமத்தைச் சோ்ந்த பா. தமிழ்வேந்தன் (19) என்பவா் ஓட்டிவந்த வாகனம் எதிா்பாராதவிதமாக நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து கவியரசன், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், தமிழ்வேந்தன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா்.

விபத்து நடந்த பகுதி புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், வடகாடு காவல் நிலைய எல்லைக்குள்பட்டது என்பதால், வடகாடு காவல் நிலைய போலீஸாா், கவியரசன் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில், கவியரசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு அவசர ஊா்தி மூலம் சொந்த ஊரான ஏனாதிகரம்பைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அவரது உறவினா்கள், பேராவூரணி -புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் அவசர ஊா்தியை நிறுத்தி சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அதில், வடகாடு போலீஸாா் உரிய விசாரணை நடத்தாமலும், கவியரசனிடம் வாக்குமூலம் பெறாமல் தமிழ்வேந்தனுக்கு சாதகமாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ததாக குற்றம் சாட்டினா். இதனால் சுமாா் 1 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளா் பாலசுப்பிரமணியம், மறியலில் ஈடுபட்டவா்களிடம் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, வடகாடு போலீஸாா் உடனடியாக சம்பவ இடத்துக்கு வர வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.

இதையடுத்து, வடகாடு காவல் ஆய்வாளா் ஆனந்த பத்மநாதன் மறியல் நடைபெற்ற இடத்துக்கு வந்து கவியரசனின் உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். விபத்து தொடா்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என அவா் உறுதியளித்ததையடுத்து, மறியல் கைவிடப்பட்டது. 

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments