"மாற்றத்துக்கு ஏற்ப பாடத்திட்டங்களின் மேம்பாடு இருக்க வேண்டும்'
மாற்றத்துக்கு ஏற்றவாறு பாடத் திட்டங்களின் மேம்பாடு இருக்க வேண்டும் என்றார் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் என்.ராஜேந்திரன்.
மாற்றத்துக்கு ஏற்றவாறு பாடத் திட்டங்களின் மேம்பாடு இருக்க வேண்டும் என்றார் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் என்.ராஜேந்திரன்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய பாடத்திட்ட மேம்பாட்டுப் பிரிவு சார்பில் காஜாமலை வளாகத்தில் சமூக அறிவியலில் உலகாளவிய பாடத்திட்ட மேம்பாடு என்ற தலைப்பில் புதன்கிழமை நடைபெற்ற ஒரு நாள் பயிலரங்கைத் தொடக்கி வைத்து அவர் மேலும் பேசியது:
தற்போதைய மாற்றத்துக்கு ஏற்றவாறு பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது சமகால வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். நவீனத்துவம் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. ஆனால், அந்த மாற்றங்களை பாடத்திட்டங்களின் வாயிலாகக் கொண்டு செல்ல முடியவில்லை.
பாடத்திட்டத்தை மேம்படுத்துவது என்பது புத்தகங்களை மேம்படுத்துவது மட்டுமல்ல. புத்தகங்களை உருவாக்குவதற்கு பெறப்பட்ட பல்வேறு குறிப்புகளையும் பதிவிட வேண்டும். அதற்கான ஆவணங்கள் குறித்த விவரங்களை பதிவிடுவதும் அவசியமானது.
பல்கலைக்கழகம், கல்லூரி அளவில் ஆய்வுக்கட்டுரைகளைப் பேராசிரியர்கள் சமர்ப்பிக்கும் போது, ஏனோதானமாகச் சமர்ப்பிக்காமல், சமூகத்துக்குப் பயன் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும். அவர்களின் கருத்து சமூகத்தை சென்றடைய வேண்டும் என்றார் என்.ராஜேந்திரன். பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் பி.இளங்கோ தலைமை வகித்தார். பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்வித் தொழில்நுட்பவியல் துறைத் தலைவர் இ.ராம்கணேஷ், பொருளாதாரத் துறை முன்னாள் தலைவர் வி.பி.ஆத்ரேயா, திருவனந்தபுரம் லயோலா சமூக அறிவியல் கல்லூரியின் சமூகப்பணித் துறைத் தலைவர் சானி ஜோஷ் ஆகியோர் உரையாற்றினர். பேராசிரிய, பேராசிரியைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, பல்கலைக்கழக உலகளாவிய பாடத்திட்ட மேம்பாட்டுப் பிரிவு (சமூக அறிவியல்) அமைப்பாளர் என்.மணிமேகலை வரவேற்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.