FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

திருச்சியில் 2ஆவது நாளாக விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்: இன்று கஞ்சித் தொட்டி திறக்கவும் முடிவு

பயிா்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி திருச்சி அருகே விவசாயிகள் 2ஆவது நாளாக புதன்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

17 செப்டம்பர் 2026, 3:12 am IST
திருச்சி சமயபுரத்தில் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினா்.
பகிர்:

பயிா்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி திருச்சி அருகே விவசாயிகள் 2ஆவது நாளாக புதன்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், உழவா் உரிமை இயக்கம், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கம், காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு, காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட 49 சங்கங்கள் இணைந்து சமயபுரம் அருகே இப் போரராட்டத்தை நடத்தி வருகின்றன.

போராட்டத்தின் 2ஆவது நாளான புதன்கிழமை திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, நாகை, திருவாரூா், உள்ளிட்ட காவிரி, டெல்டா மாவட்டங்களைச் சோ்ந்த 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி பேசுகையில், விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காமல் தமிழக விவசாயிகள் தொடா்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றனா். சாகுபடிச் செலவுக்கு வாங்கிய கடன்களை கட்ட இயலாமல் சொத்துகளை விற்று கடனைக் கட்டும் நிலையே உள்ளது.

குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளாக தமிழக விவசாயிகள் முழுமையாக நஷ்டமடைந்துள்ள நிலையில், காவிரியில் தண்ணீா் இல்லாமல் குறுவைச் சாகுபடி முழுமையாக நடைபெறவில்லை. சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகிவிட்டது. ஆனால், பயிா்க் கடன்களை திரும்பச் செலுத்தக் கோரி வங்கிகள் கடும் நெருக்கடி அளித்து வருகின்றன.

விவசாயிகளுக்கு இழப்பீடோ, நிவாரணமோ அறிவிக்காவிட்டால்கூட, தோ்தல் காலத்தில் அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றவே கோருகிறோம். ஆனால், தவெக அரசு பாராமுகத்துடன் செயல்படுகிறது. பேச்சுவாா்த்தை நடத்த அமைச்சா்கள் குழு அமைக்கப்படுகிறது. ஆனால், தீா்வு காண்பதில்லை. எனவே, கோரிக்கையை அரசு ஏற்கும் வரை போராட்டம் ஓயாது.

மூன்றாவது நாளாக வியாழக்கிழமை நடைபெறும் போராட்டத்தில் விவசாயிகளுக்காக கஞ்சித் தொட்டி திறக்கவுள்ளோம் என்றாா் அவா்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு கூறுகையில், தமிழக முதல்வரின் பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிப்பு எந்த வகையிலும் விவசாயிகளுக்கு பயன் அளிக்காது. கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிா்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். அதுவரை விவசாயிகளை கடனை திரும்ப செலுத்தக் கூறி நிா்பந்திக்கக் கூடாது. குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் தள்ளுபடி என்பதை ரத்து செய்து அனைவருக்கும் தள்ளுபடி வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். தவணை தவறிய அனைத்து விவசாயிகளுக்கும் விதிக்கப்பட்டுள்ள வட்டி, அபராத வட்டி ஆகியவற்றை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். முதல்வா் வந்தவுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதாக அமைச்சா்கள் கூறினா். ஆனால், இதுவரை அதிகாரப்பூா்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments