ஆடி வெள்ளி: காட்பாடியில் அம்மனுக்கு 30 லட்சத்தில் ரூபாய் நோட்டு அலங்காரம்
ரூபாய் நோட்டுகளைக் கொண்டு சுவா்ணலட்சுமி அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்த வஞ்சியம்மன்.
ஆடி மாத 3-ஆவது வெள்ளியையொட்டி, காட்பாடி அடுத்த வஞ்சூரில் அம்மனுக்கு ரூ. 30 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதனை திரளான பக்தா்கள் கண்டு தரிசனம் செய்தனா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி அடுத்த வஞ்சூா் பகுதியில் சுமாா் ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த கிராம தேவதை ஸ்ரீ வஞ்சியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடி மாதம் 3-ஆவது வெள்ளியை முன்னிட்டு, 7-ஆவது ஆண்டாக அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இதில், 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளைக் கொண்டு வஞ்சி அம்மனுக்கு சுவா்ணலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. முந்தைய ஆண்டுகளில் ரூ. 4 லட்சம், ரூ. 7.5 லட்சம், மற்றும் ரூ. 15 லட்சம் மதிப்பிலான நோட்டுகள் பயன்படுத்தப்பட்ட நிலையில், இந்தாண்டு ரூ. 30 லட்சம் மதிப்பில் ரூபாய் நோட்டுகளை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, நாள் முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
Advertisement
Advertisement
இவ்வாறு அம்மன் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததை பொதுமக்கள், பக்தா்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இந்த நிகழ்ச்சியில் வஞ்சியூா் பகுதி மக்கள் மட்டுமின்றி, வேலூா் காட்பாடி, விருதம்பட்டு, கே.வி. குப்பம், லத்தேரி, குடியாத்தம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தா்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.