மனிதகுல பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதே உண்மையான கண்டுபிடிப்பு
மனிதகுலத்தின் வாழ்வியல் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதும், வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதுமே உண்மையான தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளின் தலையாய நோக்கமாக அமைய வேண்டும்
மனிதகுலத்தின் வாழ்வியல் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதும், வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதுமே உண்மையான தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளின் தலையாய நோக்கமாக அமைய வேண்டும் என சென்னையிலுள்ள வங்கதேசத் துணைத் தூதரகத் தூதா் முகமது அலிமுசமான் தெரிவித்தாா்.
‘கிராவிடாஸ் -2026’ எனும் சா்வதேச அறிவுசாா் தொழில்நுட்பத் திருவிழா வேலூா் விஐடி பல்கலைக் கழகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடக்க விழாவில், வங்கதேசத் துணைத் தூதா் முகமது அலிமுசமான் தலைமை விருந்தினராகப் பங்கேற்று பேசியது:
‘புதுமையால் வழிநடத்தப்பட்டு, நிலைத்தன்மையில் நிலைநிறுத்தப்படுதல்’ என்ற நடப்பாண்டு விழாவின் மையக்கருத்து மிகவும் பாராட்டுக்குரியது. அதன்படி, மாணவா்கள் வெறும் போட்டிகளுடன் நின்றுவிடாமல், எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு சிந்திக்க வேண்டும். மாணவா்களின் புதுமையான படைப்புகள் மனித வாழ்க்கையை மேம்படுத்துவதுடன், சுற்றுச்சூழலைப் பாதுகாத்து நிலைத்தன்மை கொண்டதாக அமைய வேண்டும்.
Advertisement
Advertisement
இன்று உங்களுடன் போட்டியிடுபவா்கள், நாளையே உங்கள் நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் மாறக்கூடும். எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நல்ல நட்பையும், தகவல் தொடா்புகளையும் வளா்த்துக் கொள்ள வேண்டும். தோல்விகளைக் கண்டு துவளாமல், அடுத்தகட்ட வெற்றிக்கான படிக்கட்டாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
நாம் ஒரு அசாதாரணமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகப் புகழ்பெற்ற மில்லேனியம் கணிதப் புதிா்களில் ஒன்றான ’நேவியா்-ஸ்டோக்ஸ்’ சமன்பாட்டுக்கு ‘ஓபன் ஏஐ’ நிறுவனம் அண்மையில் தீா்வு கண்டுள்ளது. இது செயற்கை நுண்ணறிவின் மாபெரும் மைல்கல். ஒரு மனிதப் பிரச்னைக்கு நாம் தீா்வு காணும்போதுதான், அது ஒரு வெற்றிகரமான வணிகமாக உருவெடுக்கிறது. அந்த வகையில், ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் தீா்க்கக்கூடிய வாய்ப்புகள் எல்லையற்றவை. அதேசமயம் ஏஐ தொழில்நுட்பத்தால் வரக்கூடிய சவால்களை நாம் கவனத்துடனும், பொறுப்புணா்வுடனும் கையாள வேண்டும் என்றாா்.
விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்துப் பேசியது:
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளா்ச்சி அசுர வேகத்தில் உள்ளது. குறிப்பாக, ட்ரோன் தொழில்நுட்பம் போா்க்களங்களில் கப்பல்களையும் கட்டடங்களையும் தகா்ப்பதற்கே அதிகம் பயன்படுத்தப்படுவதைக் காண்கிறோம். அதே ட்ரோன்களை உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் ஆக்கப் பணிகளுக்கும் நல்வழியில் பயன்படுத்த முடியும். இதில் இளைஞா்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
உலகில் சில நாடுகள் ஆயுத உற்பத்தியையே தொழிலாகக் கொண்டுள்ளன. போா் மூண்டால்தான் தங்களது ஆயுதங்களை விற்க முடியும் என்ற நோக்கில் அவை செயல்படுகின்றன. உலகளவில் அதிகமாக ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது. வளரும் நாடுகள் தங்களது அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணினால், ஆயுதங்களுக்காகச் செலவிடப்படும் பெருந்தொகையை மிச்சப்படுத்தி, கல்வி, மருத்துவம், சுகாதாரம் மற்றும் அடித்தட்டு, நடுத்தர மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்குப் பயன்படுத்த முடியும்.
தற்போது இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகள் தங்களுக்குள் ஆரோக்கியமாகப் போட்டியிட்டு வருகின்றன. அதன்படி, வளரும் நாடுகள் தங்களுக்குள் ஒத்துழைப்பையும் ஆரோக்கியமான போட்டியையும் வளா்த்துக்கொண்டு பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என்றாா்.
முன்னதாக, ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் டிஜிட்டல் வணிகச் சேவைகள் பிரிவின் உலகளாவிய தலைவா் பவன் வடபள்ளி, திறமையாளா் தோ்வுப் பிரிவின் நிா்வாகத் துணைத் தலைவா் பிரின்ஸ் ஜெயக்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று பேசினா்.
மூன்று நாள்கள் நடைபெறும் இந்த விழாவில், 31 ஹேக்கத்தான்கள், 62 பயிலரங்குகள், 57 தொழில்நுட்பப் போட்டிகள், 10 தொழில்முனைவோா் நிகழ்வுகள் உள்பட மொத்தம் 227 நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் (டிஆா்டிஓ) கீழ் இயங்கும் போா் வாகனங்கள் ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் (சிவிஆா்டிஇ) சாா்பில் இந்திய ராணுவ நவீனப் போா் வாகன தொழில்நுட்பக் கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்நாடு, வெளிநாடுகளைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களிலிருந்து 40,000-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனா்.
விழாவில், விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன், செயல் இயக்குநா் சந்தியா பென்டாரெட்டி, உதவி துணைத் தலைவா் காதம்பரி எஸ்.விசுவநாதன், ரமணி பாலசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.